செய்திகள்

இந்தி தேசிய மொழி அல்ல | Hindi is not a national language

இந்தியும் இந்தியாவும்..

Hindi national language: புதிய பாஜக அரசு பதவியேற்ற சிலநாட்களில் உள்துறை அமைச்சகம் இவ்வாறு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
“It is ordered that government employees and officials of all ministries, departments, corporations or banks, who have made official accounts on Twitter, Facebook, Google, YouTube or blogs, should use Hindi, or both Hindi and English, but give priority to Hindi.” “ட்விட்டர், பேஸ்புக், கூகுள், யூடியூப் அல்லது வலைப்பூக்களில் அலுவலக ரீதியான கணக்கு வைத்திருக்கும் அமைச்சர்கள், துறைகள், வாரியங்கள் அல்லது வங்கிகள் அனைத்தும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும், அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம், ஆனாலும் இந்திக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.”
இதுதான் புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

india-language

ஆங்கிலம் இருக்கலாம் என்றுதானே சொல்லியிருக்கிறார்கள் என்று சில அப்பாவிகள் கேட்கிறார்கள். ஆங்கிலமும் இருக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, இந்திக்கே பிரதானம் என்பது இதில் தெளிவாக இருக்கிறது.
இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்து எழுதிய கடித்த்துக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர், கிரன் ரிஜிஜு, “பிராந்திய மொழிகளை பின்னுக்குத் தள்ளும் நோக்கம் ஏதும் இல்லை, இந்தி தேசிய மொழி என்பதால் அதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே நோக்கம்” என்று கூறினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம்

அரசமைப்புச் சட்டம் தெரியாமல் அமைச்சர் ஆவது தவறில்லை. ஆனால் அமைச்சரான பிறகாவது கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது இப்படி உளறாமலாவது இருக்க வேண்டும்.

இந்தியாவில் தேசிய மொழி – national language – ஏதும் கிடையாது. Official languages – அலுவல் மொழிகள்தான் (நிர்வாக மொழிகள் அல்லது ஆட்சி மொழிகள்) உண்டு. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப 22 அலுவல் மொழிகள் உள்ளன. மைய அரசைப் பொறுத்தவரை இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகள், மாநிலங்களுடனான தொடர்பு மொழிகள்.
அமைச்சரின் இந்த உளறலைத் தொடர்ந்து தமிழகத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தி தேவை என்று சிலரும், இந்தி கூடாது என்று சிலரும் வாதிடுகிறார்கள். இந்த விவாதங்களைப் பார்க்கையில், பெரும்பாலோருக்கு இந்தி தேசிய மொழி அல்ல என்பதே தெரியாது என்பது புரிகிறது.

அதுதான் போகட்டும் என்றால், ஏதோ தமிழகத்தில் இந்திக்கு இடமே தரப்படாமல் தடுக்கப்படுவதாக வேறு குரல் கொடுக்கிறார்கள். எனவே, விவாதங்களின் கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. பக்கத்து மாநிலங்களில் மூன்று மொழிகளும் உள்ளன. தமிழர்களுக்கு மட்டுமே இந்தி தெரியாது. இந்தி தெரியாமல் வெளிமாநிலங்களுக்குப் போய் வாழ்க்கையை ஓட்ட முடியாது.

அ. இந்தி மட்டும் வைத்துக்கொண்டு எந்த மாநிலத்திலும் ஓட்டிவிடமுடியாது. மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் மராட்டிதான். இந்தியை வைத்துக்கொண்டு ஒரு பஸ் ஏறிவிடக்கூட முடியாது. ஹரியாணாவில் ஹரியாண்வி, உத்திரப் பிரதேசத்தில் மைதிலி, போஜ்புரி, வடகிழக்கு மாநிலங்களில் அவர்களுக்கே உரிய மொழிகள் என பல மொழி பேசுவோர் உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்தியே தெரியாது. நமக்கு இந்தி தெரிந்திருந்தாலும்கூட அவர்கள் பேசுவதை நாம் புரிந்துகொள்ள முடியாது.

ஆ. தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு அப்படி எவ்வளவு வேலை வாய்ப்புகள் வெளிமாநிலங்களில் இருக்கின்றன… அப்படிப்பார்த்தால், கர்நாடகத்துக்குச் செல்பவன் கன்னடமும், கேரளா செல்பவன் மலையாளமும், ஆந்திரா செல்பவன் தெலுங்கும் கற்றாக வேண்டும். அதையும் கட்டாயம் ஆக்க வேண்டுமா…

இ. இன்றைய காலகட்டத்தில் பீகார், உ.பி., ம.பி., ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லட்சக் கணக்கில் தென் மாநிலங்களுக்கு வேலை வாய்ப்புக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழோ கன்னடமோ தெரியாமல் வரவில்லையா…

ஈ. அப்படியே வேலைவாய்ப்புகளுக்காக கற்றுக்கொள்ள வேண்டுமானால் பல நாடுகளில் புழங்குகிற ஆங்கிலம் இன்னும் அதிக வாய்ப்புகளைக் கொடுக்கும் அல்லவா…

உண்மை என்னவென்றால், மொழியைக் கற்றுக்கொண்டுதான் அந்த மாநிலத்துக்குப் போகவேண்டும் என்பதில்லை. அங்கே போனபிறகு, தேவை ஏற்படும்பட்சத்தில் தானாகவே கற்றுக்கொள்ள முடியும். தேவைதான் அதை முடிவு செய்யும். தேவைதான் எதையும் கற்க வைக்கிறது.

2. தமிழர்கள் இந்தி கற்று முன்னேறிவிடக்கூடாது என்று தமிழ்நாட்டில் சில அரசியல்வாதிகள் செய்கிற சதி. வருங்கால சந்ததிகளாவது இந்தி கற்றுக் கொள்ளட்டும்.

அ. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்தி கட்டாயப் பாடம் இல்லை என்று நீக்கப்பட்ட பிறகு, கடந்த 40-50 ஆண்டுகளில் இந்தி கற்க தமிழ்நாட்டில் எந்தத் தடையும் இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய திமுக ஆட்சிக்காலத்திலும் சரி, அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, மெட்ரிக் பள்ளிகளில் இந்தி பாடமாகத் தொடர்ந்து இருக்கிறது. சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி பாடமாக இருக்கிறது. தட்சிண பாரத் இந்தி பிரச்சார் சபா போன்ற மாநில அமைப்புகளும், மத்திய அரசின்கீழ் இருக்கும் சென்ட்ரல் இந்தி டைரக்டரேட், ஆக்ராவில் இருக்கும் சென்ட்ரல் இந்தி இன்ஸ்டிடியூட் போன்ற அமைப்புகளும் இந்தி மொழி கற்பித்து வருகின்றன. அதற்கே பல கோடி ரூபாய் செலவு செய்து, கிட்டத்தட்ட இலவசமாக அஞ்சல் வழி இந்தி கற்பிக்கின்றன. எனவே, விருப்பம் இருக்கிற யாரும் இந்தி கற்றுக்கொள்ளலாம். யாரும் தடை செய்யவில்லை.

3. இந்தி மொழி வருவதால் தமிழ் அழிந்து விடாது. பக்கத்து மாநிலங்களில் எல்லாம் மூன்று மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த மொழிகள் அழிந்து விட்டனவா….
அ. தமிழ் அழிந்துவிடாதுதான். தமிழ் இந்தியாவில் மட்டும் இல்லை என்பதும் காரணம். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் கற்கும் ஆர்வமே இல்லாத நிலை அதிகரித்துக் கொண்டே வருகிறபோது, தமிழ் அழிந்து விடாவிட்டாலும் அரிதாகும் நிலை வரவே செய்யும்.

ஆ. பக்கத்து மாநிலங்களை உதாரணமாகக் காட்டும் நண்பர்கள், உதாரணத்துக்கு கர்நாடகத்தில் கன்னடம் கட்டாயப் பாடமாக இருப்பதைப் பேச மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப்பாடம் இல்லை.

இ. மேலும், மேலே 2இல் சொன்ன பதில் இதற்கும் பொருந்தும். யாரும் தமிழ் மட்டுமே கற்றாக வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. இந்தியை கட்டாயமாகத் திணிக்காதீர்கள் என்று மட்டுமே சொல்கிறோம்.

4. மொழியை மொழியாக மட்டும் பார்ப்போமே… ஆங்கிலத்தை ஏற்கும்போது, நம் நாட்டின் மொழியான இந்தியை ஏற்பதில் என்ன தவறு…

அ. மொழி என்பது வெறும் ஒலியோ, எழுத்துகளோ, தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமோ அல்ல. அது ஓர் இனத்தின், பண்பாட்டின் அடையாளம். நமது வரலாற்றுத் தொடர்ச்சியின் வெளிப்பாடு.

ஆ. பலநாடுகளும் விரும்பியோ விரும்பாமலோ, இயற்கையாகவோ ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவாகவோ, ஆங்கிலம் பல நாடுகளிலும் பரவிவிட்டது. இந்தியா என்பது ஒரு தேசமாக ஆனதும்கூட பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுதான். எனவேதான் இந்தியாவை ஒன்றுபடுத்தி வைக்க ஆங்கிலம் உதவியது. அதுவே தொடர்கிறது.

இ. மைய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையின் நோக்கம், பன்முகப் பண்பாடு கொண்ட, பலமொழிகள் கொண்ட இந்தியாவில் ஒற்றைப் பண்பாட்டை, ஒருமொழி ஆதிக்கத்தை திணிக்கும் முயற்சி. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

5. இந்தி தேசிய மொழி அல்லவா… ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக ஏற்கும்போது, இந்தியை ஏன் ஏற்கக் கூடாது?

அ. இந்தி தேசிய மொழி அல்ல. இந்தியாவில் தேசிய மொழி என்று ஏதும் கிடையாது. இந்தி, ஆங்கிலம் உள்பட, 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள்.

ஆ. இந்தியா மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட, பன்மொழிகளும் கொண்ட கூட்டாட்சி நாடு. இங்கே எல்லா மாநிலங்களிலும் இந்தி பேசப்படுவதில்லை. பலருக்கும் தம் தாய்மொழி தவிர இரண்டாவது மொழி தெரியாது.

இ. இதுபோல ஒற்றைமொழியைத் திணிக்க முயன்ற பல நாடுகள் தோல்வி கண்டுள்ளன, உடைந்து சிதறியுள்ளன. உதாரணத்துக்கு வங்கதேசமும், ரஷ்ய ஒன்றிய நாடுகளும்.

ஈ. நல்லதோ கெட்டதோ, ஏற்கிறோமோ மறுக்கிறோமோ, உலகமயத்தை நோக்கி நாம் வேகமாகவும் வெகுதூரமும் பயணித்து விட்டோம். ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்றாலும் கல்வியிலும் முன்னேறி வருகிறோம். ஆக, உலகமயச் சூழலில், பன்னாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால், இந்திய மொழியை அல்ல, சர்வதேச மொழியை இணைப்பு மொழியாக வைத்திருப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் லாபகரமானது. ஆங்கிலமும் தெரிந்திருப்பது தமிழர்களுக்கு சாதகம். உலகிலேயே ஆங்கிலம் பேசுவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது இந்தியா.

6. இந்தி கற்பதால் இந்திய அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

அ. வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் இந்தி கற்றுக்கொண்டாலும்கூட, இந்தியைத் தாய்மொழியாகக் கற்றுக் கொண்டவருடன் சரிசமமாகப் போட்டியிட முடியாது. விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் அவை விதியாகி விடுவதில்லை.

ஆ. கடந்த ஆண்டு, மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓர் உத்தரவு வெளியிட்டது நினைவிருக்கலாம். இந்தி ஆங்கிலம் தவிர பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என்ற அந்த உத்தரவு வந்தபோதும் இப்போதுபோலவே விவாதங்கள் எழுந்தன. எதிர்ப்புகள் எழுந்ததால், அந்த உத்தரவு நிறுத்தப்பட்டது. (இப்போதைய பிரதமர் மோடியும் அப்போது அதை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

மைய அரசின் சுற்றறிக்கையால் யார் பாதிக்கப்பட்டு விட்டார்கள், எதற்கு இந்தக் கூப்பாடு ?

பாதிக்கப்பட்ட பிறகுதான் கூப்பாடு போட வேண்டுமா என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்…
பன்மொழிகள் கொண்ட கூட்டாட்சிக் குடியரசான நம் நாட்டில், மைய அரசின் அனைத்துத் துறைகளும் தமது வலைதளங்களில் உள்ள முக்கியமான விவரங்களை 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும், இந்தியர்கள் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றால் அது ஓரவஞ்சனை இல்லையா…
இந்த அளவுக்கும்கூடப் புரியாமத்தான் இங்கே விவாதம் நடத்திட்டிருக்கோமா…
பி.கு. அமெரிக்க அரசேகூட தன் பிரசுரங்களை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளது.

கடைசியாக, நான் சொல்ல விரும்பாததையும் சொல்ல வேண்டியிருக்கிறது. என்னதான் இந்தியா, ஒற்றுமை, ஒருமைப்பாடு என்று நாம் கூவிக் கொண்டிருந்தாலும் வடக்கத்தியர்களுக்கு இந்திதான் மேலான மொழி என்ற பாவனை மறைவதே இல்லை. முலாயம் சிங் முதல், ராஜ்நாத் சிங் வரை பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்தும். (இந்தியே தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று மைய அமைச்சராக இருந்த காலத்தில் கூவியவர் முலாயம் சிங் யாதவ். கடந்த ஆண்டில்கூட, நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியவர்.) பி.ஜே.பி.க்கு இந்தி மீது பற்று அதிகம்.
இப்போது புதிதாக இவர்கள் மொழி சர்ச்சையைத் துவக்கியதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். விலைவாசி கடுமையாக ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னும் அதிகமாகப்போகிறது. பதவியேற்றதும் கூறிய “அனைவரையும் அரவணைத்துச் செல்வோம்” என்ற வேடம் வெளுத்துக்கொண்டிருக்கிறது. உறுதியளித்ததற்கு மாறாக, பழிவாங்கும் வேலைகள் துவங்கிக் கொண்டிருக்கின்றன. ஈராக் பிரச்சினைவேறு தலைவலியாக இருக்கிறது. இவற்றிலிருந்து திசைதிருப்பவே மொழியைக் கையில் எடுத்திருக்கவும் கூடும். உறுதியாகச் சொல்ல இயலவில்லை. முத்தாய்ப்பாக, இந்தப் பதிவு இந்திக்கு எதிரானதல்ல. இந்தி கற்பதற்கும் எதிரானதல்ல. இந்தியைத் திணிக்கும் முயற்சிக்கு எதிரானது.

-ஷாஜஹான்,புதுதில்லி

About the author

admin

Leave a Comment