செய்திகள்

திமுகவை நேரடியாக தாக்க திராணி இல்லாமல் ஸ்டாலினை பழிக்கிறார்கள்: கலைஞர் விளாசல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதும்; அதைக் கண்டு எதிரிகளைவிட நம்மிடையே இருக்கின்ற ஒரு சில நண்பர்கள் எனப்படுவோர் அதிக மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். DMK-Kalaignar-Karunanidhi:

M-KARUNANIDHI

தி.மு. கழகத்தை இந்தத் தேர்தலோடு ஒழித்துக் கட்டி விடலாம் என்று கனவு கண்ட அவர்களிடையே – அடுத்து காண இருக்கின்ற களங்களுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் இந்தச் சூழலில் – இந்தக் கருத்து விளக்கத்தை என்னுடைய உடன்பிறப்புகள் புரிந்துகொள்ள வேண்டுமென்ப தற்காகத் தருகிறேன்.

ஏதோ இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு முடிந்து விட்டது என்பதைப் போலவும், அடுத்து இந்தக் கழகம் எழவே எழாது, எழுந்து நடக்கவே செய்யாது என்ற நினைப்புடனும் திராவிட முன்னேற்றக் கழகத்தை இப்போதும் விடாமல் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அப்படி விமர்சிப்பவர்கள் என்னைத் தாக்கிப் பேசியும் எழுதியும் நம்முடைய உயிரனைய தம்பிமார்களையும், உழைத்து இந்தக் கழகம் வளர்த்த தளபதிகளையும்; இழித்தும் பழித்தும், மக்கள் மன்றத்தில் அவர்களைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியும், பிரச்சாரம் செய்வதிலிருந்தே அவர்களை தி.மு.கழகத் தொண்டர்களிடமிருந்து பிரித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக வரலாறு

அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்வேன்! தயவுசெய்து திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்! அதை எத்தனை எத்தனையோ வம்பர்களும், வஞ்சகர்களும் வீழ்த்த எண்ணி வீசிய வலைகள் எல்லாம் அறுந்து தூள் தூளாகப் போய்விட்டன என்பதை இந்த நாடு உணரும் – நாமும் உணர்வோம்.

எதிரிகள் ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாகத் தாக்குவதற்குத் திராணி இல்லாத காரணத்தால்; முதற் கட்டமாக என்னைத் தூக்கிப் பேசியும், எழுதியும் – அதே நேரத்தில் என் தலைமையிலே உள்ள தளபதி ஸ்டாலின் போன்றவர்களை இழித்தும், பழித்தும் கேலி செய்தும், கிண்டல் புரியதும், மனத்தளர்ச்சி அடையச் செய்து – அடுத்த கட்டமாக அவர்களையும் வீழ்த்தி விட்டால், பின்னர் பூண்டற்றுப் போய் விடும் இந்தக் கழகம் என மனப்பால் குடிக்கின்ற காரணத்தால், ஒரே கட்டுரையில் என்னைப் புகழ்ந்தும், போற்றியும், என்னால்தான் இந்தக் கழகத்தைக் காத்திட முடியும் என்று துதி பாடியும் – அதைத் தொடர்ந்து அதே கட்டுரையில், அடுத்த வரியிலேயே கழகத்தில் தலை எடுக்கக் கூடிய ஸ்டாலின் போன்றவர்களை கேலியும், கிண்டலும் செய்தும் எழுதுகிறார்கள். என்னைப் பற்றிப் புகழ்ந்து எழுதினால் சிலருக்கு ஒருவித மகிழ்ச்சி ஏற்படும் என்றும் – அந்த மகிழ்ச்சி மறைவதற்குள்ளாகவே ஸ்டாலின் போன்றவர்களைத் தாக்கியும், கேலி செய்தும் அவர்கள் கட்சியை நடத்துவதற்கே தகுதியற்றவர்கள் என்பது போல விமர்சித்தும் கட்டுரைகள் தீட்டுகிறார்கள். அவர்கள் போடும் கணக்கு என்ன தெரியுமா? எல்லோரும் சேர்ந்து தலைவரை ஏற்கனவே இருந்ததைவிட ஓரளவு வீழ்த்தி விட்டோம்; அடுத்துப் பாடுபடுகிற தளபதி போன்றவர்களையும் வீழ்த்துவதற்கு இது தான் தக்க தருணம் என்று
நம்புகிறார்கள் போலும்!

அந்த நம்பிக்கையிலேதான் கடந்த சில வாரங்களாக ஒருசிலர், அந்தத் தந்திரத்தில் ஈடுபட்டு – நம்முடைய அகம் குளிர்ந்திருப்பதைக் கண்டு, அப்படி குளிரவைத்தவர்கள் நாம்தானே; தொடர்ந்து இப்போது நாம் ஆற்றி வருகிற பணியின் மூலம் அறவே புல் பூண்டுகளே இல்லாமல் இந்தத் திராவிட இயக்கத்தை அழித்துவிட முடியாதா என்று கனவு காண்கிறார்கள். இவர்கள் கனவு முடிந்து, அதன் தொடர்பாக கதைகளைக் கட்டி, இந்தக் கழகத்தில் கலகம் விளைவித்து, அதன் மூலம் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வோம் என்று திராவிட இயக்கத்தைத் தரைமட்ட மாக்கி விடுவோம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இடம்
கொடுக்காமல், உடன்பிறப்பே, வஞ்சகம் புரியதும், இச்சகம் பேசியும் நம்மை நெருங்குவோர் யாராயினும், அவர்கள் எப்போதும் நம்மை வெறுப்பவர்களே என்பதைப் புரிந்து கொண்டு அவர்களை விட்டு விலகி நின்று உயிரனைய நம்முடைய கழகத்தை வளர்ப்போம். கழகக் கொடியை உயர்த்திப் பிடிப்போம் என உறுதி கொள்ள வா வா என்று உன்னை நான் அழைக்கிறேன்.

இந்தத் துண்டறிக்கையின் சூட்சமத்தை நீ புரிந்து கொண்டால் நான் என்ன கருதுகிறேன், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்!

About the author

admin

Leave a Comment