செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அரசு முடிவு

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, முல்லைப் பெரியாறு (Mullaiperiyar Dam) அணையை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் அணை யின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக விரைவில் உயர்த்த தகுந்த நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்சநீதிமன்றம் மே 7ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத், மதன் பி லோகூர், எம்.ஒய்.இக்பால் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில், கேரள அரசு கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வந்த கேரள பாசனம் – தண்ணீர் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் செல்லாது.

Tamil_News

உச்சநீதிமன்ற தீர்ப்பு

அரசியல் சாசனத்திற்கு முரணான இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையில், மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் வகையில் ஒரு மாநிலம் தானாகவே முடிவு எடுக்க முடியாது என தெரிவித்திருந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணித்து பராமரிக்க மூன்று உறுப்பினர் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய நீர்வள ஆணையத்தின் (சிடபிள்யுசி) பிரதிநிதி மற்றும் தமிழ்நாடு, கேரள அரசுகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பர். உயர் அதிகாரம் படைந்த இந்த குழு, அணையை குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வையிட்டு, அணையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பராமரிக்கவும் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.

இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் பிரதிநிதி இருப்பார் என பரபரப்பான தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு வெளியானதும் அணையின் நீர்மட்டத்தை உடனே 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்திருந்தனர். பெரியாறு அணை மதகுப்பகுதியில் வண்ணம் பூசுவது, ஷட்டர்களுக்கு கிரீஸ் வைப்பது, மதகுகளை சோதனை செய்வது, 142 அடி அளவை சுவர்களில் குறிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழக பொதுப்பணித்துறையினர் முடித்து நீர்மட்டத்தை எந்த நேரத்திலும் உயர்த்தும் வகையில் தயாராக வைத்தனர்.

முல்லைப் பெரியாறு பராமரிப்பு குழு

பராமரிப்புக்குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். கேரள பிரதிநிதியாக அம்மாநில நீர்பாசனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் குரியன் நியமிக்கப்பட்டார். குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் பிரதிநிதியை மத்திய அரசுதான் நியமிக்க வேண்டும். இவரை நியமித்தால் மட்டுமே குழு செயல்பட துவங்கும் என்பதால் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி, பராமரிப்பு குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி முல்லைப்பெரியாறு அணைக்கு மேற்பார்வை குழு அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,‘‘ என்றார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து விரைவில் குழுவின் தலைவரை அரசு நியமிக்கும். குழுத்தலைவர் தமிழக, கேரள பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவார். இக்குழு அணையை பார்வையிட்ட பின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தென் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெகு விரைவில் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

About the author

admin

Leave a Comment