சினிமா

இவர் ஒரு கருப்பு சிவாஜி, சுய பகடி கலைஞன் ‘வைகைப் புயல்’ வடிவேலு

வடிவேலு

வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார்.

வடிவேலு வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு: அக்டோபர் 10, 1960

பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்

இவருக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா,கலைவாணி ஆகியமகள்களும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்பிரமணிக்கு சிவகங்கை, திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்

1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்

vadivelu

பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். ராஜ்கிரண், தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை முதன்முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார்.

கருப்பு சிவாஜி

deluxe pandi

வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பாத்திரத்துக்கும் இன்னொரு பாத்திரத்துக்குமான வித்தியாசமான உடல்மொழியையும் முகபாவனைகளையும் வேறுபடுத்திக் காட்டுவதிலும் மெனக்கெட்டவர். ‘நவராத்திரி’ படமே அதற்குச் சாட்சி. வடிவேலுதான் நகைச்சுவை நடிகர்களில் ஏராளமான விதவிதமான கெட்டப்களில் நடித்தவர். மேலும் அவர் எந்த கெட்டப் போட்டாலும் அது அச்சு அசல் அவருக்குப் பொருந்துகிறது. போலீஸ் வேடங்களிலேயே சில படங்களில் நடித்திருந்தாலும் ’டெலக்ஸ் பாண்டியன்’ போலீஸ் நடிப்புக்கும் ‘மருதமலை’ சிரிப்பு போலீஸ் நடிப்புக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கும். உதார் ரெளடி கேரக்டர்கள் என்றாலும் ’கைப்புள்ள’க்கும் ‘நாய்சேகரு’க்கும் வித்தியாசமிருக்கும். ’பாட்டாளி’ படத்தில் பெண்வேடமிட்டு அதகளப்படுத்தியிருப்பார்.

மேலும், சிவாஜியோடு வடிவேலுவை ஒப்பிட முக்கியமான காரணம், தமிழ் சினிமாவில் சிவாஜியின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டதில் வடிவேலுவுக்கு இணையாக ஒரு நடிகரைச் சொல்ல முடியாது. ‘டெலக்ஸ் பாண்டியன்’, மும்தாஜுடன் போலீஸ் வேடத்தில் நடித்த படம் ஆகியவற்றில் அப்படியே சிவாஜியை இமிடேட் செய்திருப்பார். ஆனால் வேறு பல படங்களிலும் சிவாஜியின் உடல்மொழியையும் முகபாவனையும் உள்வாங்கிப் பிரதிபலித்திருப்பார். சிவாஜி சீரியஸாக வெளிப்படுத்திய உடல்மொழியை காமெடியாக்கியிருப்பார். ஒருவகையில் சிவாஜியைத் தலைகீழாக்கம் செய்தவர் வடிவேலு என்று சொல்லலாம்.

சுய பகடி நகைச்சுவை

Vadivelu

வடிவேலுவின் காமெடி தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டது. சுய விமர்சனம் – சுய பகடி என்ற அடிப்படையான நல்ல அம்சத்தைத் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தியது. ஊருக்குள் உதார்விட்டுத் திரியும் மனிதர்களைத் திரையில் பிரதிபலித்து காமெடி செய்தார் வடிவேலு. ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகள், அரசியல் தலைவர்களின் மிகையான வாக்குறுதிகள், போலி ஆவேசமும் வாய்ச்சவடால்களும் நிறைந்த மேடைப் பேச்சுகள் ஆகியவற்றைக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய தமிழர்கள், உதார் மனிதர்களை காமெடி செய்து அம்பலப்படுத்திய வடிவேலுவை ஆரவாரமாகக் கொண்டாடினார்கள்.

கதாநாயகனாக வடிவேலு

Vadivelu

1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’, தெனாலிராமன், எலி போன்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

விருதுகள்:

winner

  • ‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
  • ‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.
  • ‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

அரசியல்

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

மீண்டும் சினிமாவில்

அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேல் நகைச்சுவை வசனங்கள் Tamil comedy dialog

கீழ்க்காண்பவை இவரது புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களில் சில மற்றும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும்.

Vadivelu

வசனங்கள் இடம்பெற்ற திரைப்படம்
‘இப்பவே கண்ண கட்டுதே’ ஏய்
‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’ வின்னர்
‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ வின்னர்
‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’ வின்னர்
போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது வின்னர்
‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு சந்திரமுகி
‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’ சீனாதானா 007
‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க’ ஏய்
‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன் கிரி
‘க க க போ…’ இம்சை அரசன் 23ம் புலிகேசி
‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’ கிரி
‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மட்டம் வீக்கு’ தலைநகரம்
‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’ வின்னர்
‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’ மருதமலை
‘ஒரு புறாவுக்கு போரா! பெரிய அக்கபோராகவா இருக்கு’ இம்சை அரசன் 23ம் புலிகேசி
‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’ வின்னர்
‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’ போக்கிரி
‘வட போச்சே’ போக்கிரி
‘தம்பி டீ இன்னும் வரல’ போக்கிரி
‘அந்த குரங்கு பொம்ம என்ன விலை’ போக்கிரி
‘ஆணியே புடுங்க வேண்டாம்’ பிரண்ட்ஸ்
‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’ தலைநகரம்
பேச்சு பேச்சாதான் இருக்கணும்’ வின்னர்
‘ரைட்டு விடு’ வின்னர்
‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’ வின்னர்
‘வழிய விடுங்கடி பீத்த சிரிக்கியலா’ திமிரு
‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’’ கிரி

குணச்சித்திரப் பாத்திரம்

porkaalam

நகைச்சுவைக் காட்சிகளே இல்லாமல் முழுக்க குணச்சித்திரப் பாத்திரத்திலேயே ஒரு படத்தில் வடிவேலுவால் சிறப்பாக நடிக்கமுடியும். ‘இம்சை அரசன்’ அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

23-ம் புலிகேசியாகக் கோணங்கித்தனம் செய்யும் அரசனாக நடித்திருப்பார். அதேவேளையில் புரட்சிக் குழுவைச் சேர்ந்த போராளியாகவும் நடித்திருப்பார். புலிகேசியைப் பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பார்வையாளர்களான நாம், போராளி வடிவேலு பாத்திரத்தை சீரியஸாகவே பார்த்தோம். அதுதான் வடிவேலுவின் வெற்றி.

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு.

About the author

admin

Leave a Comment