செய்திகள்

கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் பட்டியல்: மத்திய அரசிடம் அளிக்க சுவிட்சர்லாந்து முடிவு

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை (Black Money Holders List), மத்திய அரசிடம் அளிக்க சுவிஸ் அரசு முன்வந்துள்ளது. கறுப்புப் பணத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு, மிகுந்த வலுசேர்க்கும் அம்சமாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.

indian-rupees

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பட்டியலை, அந்நாட்டு அரசு தயார் செய்து வருகிறது. இந்தப் பட்டியலில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் மொத்தம் 283 வங்கிகள் செயல்படுகின்றன. இதில் யு.பி.எஸ்., கிரெடிட் சுசி ஆகியவை மிகப் பெரிய வங்கிகளாகும். வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக கருதப்படும் இந்த வங்கிகளில் வெளிநாட்டினர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து வருகின்றனர்.

தற்போது கறுப்பு பண விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் சுவிஸ் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் இந்தியர்களின் பணம் மட்டும் கடந்த ஆண்டைவிட 40% அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கொட்டப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் தற்போது ரூ.14,000 கோடியை எட்டியது.

பொதுவாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியர்களின் நேரடி முதலீடு சுவிட்சர்லாந்து பண மதிப்பில் 60 கோடி பிராங்காக இருந்தது. இது தற்போது 195 கோடி பிராங்காக (ரூ.13,650 கோடி) அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வங்கிகள் கட்டுப்பாட்டு அமைப்பான சுவிஸ் நேஷனல் பேங்க் இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியா 58-வது இடத்துக்கு முன்னேற்றம்

இந்த நிலையில், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா 70-வது இடத்தில் இருந்து 58-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கறுப்புப் பண பதுக்கல்களின் அளவு, 2012-ல் இருந்து 2013 வரையிலான காலக்கட்டத்தில் 43 சதவீதம் அதிகரித்திருப்பதையே இது காட்டுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கறுப்புப் பணத்தை முதலீடு செய்த இந்தியர்களின் பட்டியலை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வகைப்படுத்தப்படுவதாக சுவிஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தனிப்பட்ட பெயர்களை அவர்கள் குறிப்பிட மறுத்துவிட்டனர்.

இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுடன் சுவிஸ் அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும், இந்தியாவில் கறுப்புப் பணத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு தேவையான தகவல்களை அளிக்க சுவிஸ் அரசு தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்திருப்போர் பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

About the author

admin

Leave a Comment