செய்திகள்

கொடைக்கானலில் வன வளம் சுரண்டல்: வனத் துறை லஞ்ச ஒழிப்புக் குழு விசாரணை

கொடைக்கானல் வனப் பகுதியில் விலை உயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது (Forestry Exploitation in Kodaikanal ) தொடர்பாக வனத் துறை லஞ்ச ஒழிப்புக் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தேனி மாவட்டம், மேகமலைப் பகுதியில் பட்டா காட்டில் வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பாக மிகப்பெரிய அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கொடைக்கானல் பகுதியிலும் காப்புக் காட்டில், விலை உயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Kodaikanal

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனக் கோட்டத்தின் கீழ் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் அமைந்துள்ளன. கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள அரிய வகை விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்கும் வகையில், கடந்த ஆண்டு கொடைக்கானலை வன உயிரினக் கோட்டமாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த நிலையில் கொடைக்கானல் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பூம்பாறை, மன்னவனூர், வந்தரேவு, கொடைக்கானல் ஆகிய 4 சரகங்களில் கடந்த சில மாதங்களாக அதிக அளவு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ள விவரம் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளது (படம்).

இந்தப் பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் சீகை மரங்கள் வெட்டி எடுப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு, காப்புக் காடுகளில் உள்ள சீகை மரங்கள்(வேட்டில்) மற்றும் ரெட்-கம் (தைல மரத்தின் ஒருவகை), அதிக அளவில் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடத்தப்படும் மரங்களின் பயன்:

சோலைக் காடுகளில் களைச்செடியாக வளர்ந்து, தற்போது கொடைக்கானல் மலை முழுவதும் அதிக அளவில் வளர்ந்துள்ள சீகை மரங்கள், காகிதம் தயாரிக்கவும், தோல் பதனிடும் தொழிலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ரெட்-கம் மரங்கள் என்பது தைல மர வகையில் அதிக மதிப்புடையது. இந்த மரங்களைப் பயன்படுத்தி தரமான வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து வகைப் பொருள்களும் தயாரிக்கலாம்.

மரக் குச்சியை எடுப்பதற்கும் அனுமதி வேண்டும்:

வன உயிரினக் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள காடுகளில், சிறு குச்சியை எடுப்பதற்கு கூட அனுமதி கிடையாது. அதேபோல், இறந்து கிடக்கும் வன விலங்குகளை அப்புறப்படுத்தவோ, எஞ்சிக் கிடக்கும் மான் கொம்பு, யானைத் தந்தம் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த, புது தில்லியில் உள்ள தேசிய வன உயிரின ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

கடத்தலுக்காகத் தோண்டப்பட்ட யானை அகழிகள்:

கொடைக்கானலில் நிலவும் குளிரும், அங்கு வளரும் தாவரங்களும் உணவுக்கு ஏற்றதாக இல்லாததால், கொடைக்கானல் மலையில் யானைகள் தென்படுவதில்லை. இந்த நிலையில் இல்லாத யானைகளுக்கு அகழி அமைப்பதாகக் கூறி, செண்பகனூர் அடுத்துள்ள பிரகாசபுரம் பகுதி காப்புக் காட்டில் உள்ள மரங்களை, பிரபல தனியார் நிறுவனம் வெட்டி எடுப்பதற்கு வன அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அதனைப் பயன்படுத்திக் கொண்டு, காப்புக் காட்டில் இருந்த மரங்களையும் வெட்டிக் கொண்டு, இடத்தையும் அந்த தனியார் நிறுவனம் அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

வெளிச்சத்துக்கு வந்த மோசடி:

வியாபாரப் போட்டியின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் வனப் பாதுகாப்பு அலுவலருக்கு புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்த பகுதியின் வனச் சரகர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3 நாள்களாக நடைபெறும் விசாரணை:

இதுகுறித்து கடந்த 3 நாள்களுக்கும் மேலாக வனத் துறை லஞ்ச ஒழிப்புக் குழு மூலம், மரம் வெட்டப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் 4 குழுக்கள், வெட்டப்பட்ட மரங்களைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் வன அலுவலர் டி.வெங்கடேஷிடம் கேட்டபோது:

அனுமதியின்றி மரம் கடத்தியவர்கள் மீது மே மாதம் மட்டும் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் மட்டுமே மரம் கடத்தப்படுகிறது என்பதால், இரவு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரகாசபுரம் டைகர் சோலைக் காடுகள் அமைந்துள்ள பகுதியில், 43 யூக்லிப்டஸ் மரங்கள் வெட்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஏற்கனவே வறட்சியின் பிடியில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், மலை பிரதேசமான கொடைக்கானலில் வெட்டப்பட்டுவரும் மரங்களால், மேலும் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

About the author

admin

Leave a Comment