40 இந்தியர்கள் கடத்தல்! ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்;

ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்;
பாக்தாத்: ஈராக்கில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடக்கு ஈராக்கில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க படையினர் ஈராக் விரைந்துள்ளனர். ஈராக்கில் ஆளும் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

iraq us militry

பாக்தாத்தும் பறிபோகுமா?

ஈராக்கின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் கிளர்ச்சி படையினர், தலைநகர் பாக்தாத்தை தீவிரவாதிகள் நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிர்கத் நகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது. துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சதர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத்துக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் முழுவதையும் கிளர்ச்சி படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதால் பதற்றம் நிலவுகிறது. உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் மக்கள் வீடு உடைமைகளை எல்லாம் விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் குழந்தைகளுடன் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

75 % எண்ணெய் நிறுவனங்கள் தீவிரவாதிகள் வசம்

இந்நிலையில், வடக்கு ஈராக்கில் அமைந்துள்ள பாய்ஜி என்ற இடத்தில்தான் அந்நாட்டின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று அந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்களுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள், உற்பத்தி நிலையங்கள் மற்றும் நிர்வாக கட்டடம், கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதே சமயம் பிரதான கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள இடத்திற்கு அருகே அரசு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சண்டைக் காரணமாக ஈராக்கில் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்னர். எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டதால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எண்ணெய் பொருட்கள் இறக்குமதியில் ஈராக்கை பெரிதும் நம்பியிருக்கும் இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்க படையினர் விரைவு

இதனிடையே ஈராக்கில் உள்நாட்டுப் போர் கடுமையாக நடந்து வரும் சூழலில், அந்த நாட்டுக்கு அமெரிக்க ராணுவத்தினர் 275 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களை பாதுகாக்க, இவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நோக்கத்துடன் சென்றிருக்கும் அவர்கள், தேவை ஏற்பட்டால் தாக்குதலும் நடத்துவார்கள் என்றும் கிர்பி கூறினார்.

வான்வழி தாக்குதல்

ஈராக்கின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை அவ்வப்போது, அமெரிக்கா திரட்டி வருவதாகவும் ஜான் கிர்பி தெரிவித்தார். இதனிடையே ஈராக்கில் தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

40 இந்தியர்கள் கடத்தல்?

இதனிடையே ஈராக்கில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், சுமார் 90 இந்தியர்கள் அங்கு தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மொசூல் நகரில் உள்ள சுமார் 40 இந்திய தொழிலாளர்களுடனான தொடர்பை இந்திய அதிகாரிகள் இழந்துவிட்டதாகவும், அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயித் அக்பருத்தினும் உறுதிபடுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எங்களின் சிறந்த முயற்சிகளையும் மீறி ஈராக்கில் சிக்கியுள்ள சில இந்தியர்களுடன் தொடர்பு இழந்துவிட்டோம். அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். அவர்களது இருப்பிடம் தெரியவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமல் போன இந்திய தொழிலாளர்கள் 40 பேர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்தார். இதனிடையே திக்ரித் நகரின் மருத்துவமனையில் பணி புரியும் 46 இந்திய நர்ஸ்களை மீட்கும் பணியில் இந்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த 46 பேர்களில் சிலரே உடனடியாக இந்திய வர தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாங்கிய கடன்களினால் மத்திய கிழக்கில் வேறு பகுதிகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் மூடப்படுமா?

இதனிடையே ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்குள்ள இந்திய தூதரகம் மூடப்படுமா? என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயித் அக்பருத்தினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எண்ணம் எதுவும் இந்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

About the author

admin

Leave a Comment