You Are Here: Home » விவசாயம் » திருக்குறளில் விவசாய தொழிற்நுட்பம் | Agricultural Technology in Thirukkural

திருக்குறளில் விவசாய தொழிற்நுட்பம் | Agricultural Technology in Thirukkural

agricultural-technology-in-thirukkural

தமிழருக்கு உழவோடான உறவு பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒன்று. வாழ்வியல் முறையையும் அறநெறி பற்றியும் கூறும் உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் முழுமுதற்தொழிலாகிய வேளாண்மை தொழிற்நுட்பம் (Agricultural Technology in Thirukkural) பற்றிய கருத்துகளை கூறுகிறது. திருக்குறளில் கூறப்படும் வேளாண் தொழிற்நுட்பம் சார்ந்த கருத்துகளை இங்கு காண்போம்.

உழுதல் (Tillage)

வேளாண்மையின் அடிப்படைத் தத்துவம் உழவு. உழவில் தலையாய செயல் ஏர் கொண்டு உழுதல்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். – (குறள் 1037)

பெரும் கட்டிகளாக இருக்கின்ற வயல்மண் மிகச்சிறு கட்டிகளாக உடையும் வரை உழ வேண்டும், அஃதாவது புழுதியாகும் வரை உழ வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொரு சால் உழும் போதும் ஆழம் அதிகமாகிக் கொண்டே செல்லும். இவ்வாறு நன்கு உழுத மண்ணை உணக்க (பொடிப் பொடியாக உதிரும் வண்ணம் நன்கு காய விடுதல்) வேண்டும். அவ்வாறு புழுதியான மண் காய்வதினால் காற்று உள்ளே புக ஏதுவாகும். பயிருக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இதன் மூலம் புத்துயிர் பெறும். அதிகச் சத்துள்ள அடி மண் மேல் நோக்கி வருவதால் விதை விதைத்த உடன் வளரும் .வெப்பத்தின் மூலமும் பறவையினங்கள் மூலமும் பயிருக்குத் தீங்கு செய்யும் பூச்சி வகைகளின் முட்டைகளும் கூட்டுபுழுக்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

உழவுமுறை பற்றிக் கூறும் திருவள்ளுவர் மேற்கூறியவாறு உழவு செய்தால் ஒரு பிடி எருவைக் கூட இட வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், அடுத்த குறளில் அவரது கருத்துக்கு முரண்படுகிறார். மாறுபடும் கருத்துக்கான காரணமும் அடுத்த வேளாண் தொழிற்நுட்பம் பற்றியும் காண்போம்.

பயிர்ப்பாதுகாப்பு

உழவுத்தொழிலின் முக்கியக் கூறுகளை வள்ளுவர் பின்வருமாறு விளக்குகிறார்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. – (குறள் 1038)

உழுவதைக் காட்டிலும் எருவிடுதல் தலையாயது. இந்த இரண்டும் செய்தபின் களை நீக்க வேண்டும். களை நீக்கிய பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். இவை அனைத்தையும் செய்த பின் எக்காலத்திலும் பயிரைக் காப்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு மிகப் பெரிய இலக்கை அடைவதற்கு அதைச் சிறு இலக்குகளாகப் பிரித்து ஒவ்வொரு சிறு இலக்கையும் செம்மையாக மேற்கொண்டால் மலைப்புத் தெரியாமல் பயணம் எளிதாக இருக்கும். அந்த மேலாண்மை தத்துவத்தையே வள்ளுவர் கையாண்டுள்ளார்.

எருவிடுதல் பற்றிய முரண்பட்டக் கருத்துக்களை மேற்கண்ட இரண்டு குறள்களிலும் காணலாம். ஆனால், இந்த முரண்பாட்டிற்குள் ஒரு அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. அனைத்து வகை நிலங்களிலும் ஒரே மாதியான வேளாண்மை செய்வது இல்லை. காடுகள் நிறைந்த புன்செய் நிலமான முல்லை நிலத்தில் செய்யும் வேளாண் முறையும், வயற்பரப்புகள் நிறைந்த நன்செய் நிலமான மருத நிலத்தில் செய்யும் வேளாண் முறையும் வேறுபடும். புழுதி பறக்க உழுதால் ஒருபிடி எருகூடத் தேவையில்லை என்று கூறியது முல்லை நிலத்திற்கும், உழுவதைவிட எருவிடுதல் நன்று என்று கூறியது மருத நிலத்திற்கும் பொருந்தும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் உழவுத் தொழில் நுட்பத்தைப் பற்றி விளக்கியுள்ளது தமிழரின் உழவு சார்ந்த வாழ்வு முறையைக் காட்டுகிறது. அந்த மரபின் தொடர்ச்சி சென்ற நூற்றாண்டின் முற்பகுதிவரை தொடர்ந்து இருந்திருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் புதுமை அறிவியல் தொழில் நுட்பங்களும், வணிகமயமாதலின் தாக்கமும் உழவைப் பின் தள்ளியிருப்பது கசப்பான உண்மை ஆகாமல் வேளாண்மையை மேம்படுத்துவோம்.

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top