செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மகளீர்க்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த அம்பேத்கர்

ambedkar

பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர்

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். ‘‘பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர்’’ என அழைக்கப்படும் ‘‘பீம்ராவ் ராம்ஜி’’ கடந்த 1891 ஏப்ரல் 14ஆம் நாள் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் தம்பதியருக்கு 14வது குழந்தையாக பிறந்தார். இவருடைய தந்தை ராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.‘‘மகர்’’ என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி, ‘‘சாத்தாராவில்’’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.

ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’’ என்ற பெயரை, ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’ என்று மாற்றிக்கொண்டார். கடந்த 1904ம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், கடந்த 1907ம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

அம்பேத்கர் அமெரிக்கா பயணம்

பரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். கடந்த 1915ல் ‘‘பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’’ என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் ‘‘இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’’ என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு ‘‘டாக்டர் பட்டம்’’ வழங்கியது. மேலும் கடந்த 1921ம் ஆண்டு ‘‘பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’’ என்ற ஆய்வுக்கு முதுகலை அறிவியல் பட்டமும், கடந்த 1923ம் ஆண்டு ‘‘ரூபாயின் பிரச்னை’’ என்ற ஆய்வுக்கு ‘‘டி.எஸ்.சி பட்டமும் பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

அம்பேத்கர் சமூகப்பணிகள்

கடந்த 1923ம் ஆண்டுக்கு பின் இந்தியா திரும்பிய அம்பேத்கர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடிவு செய்தார். கடந்த 1924ம் ஆண்டு ஜூலை மாதம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக போராடினார். கடந்த 1930ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது, “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன்’’ என்று கூறினார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ‘‘இரட்டை வாக்குரிமை’’ முறை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த மகாத்மாகாந்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, கடந்த 1931 செப்டம்பர் 24ம் தேதி காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே ‘‘புனே ஒப்பந்தம்’’ ஏற்பட்டு, தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.

தீண்டாமைக்கு எதிராக போர்

வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர், கடந்த 1927ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு கடந்த 1930 ம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்னை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்னை எனவும் கருதிய அவர், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டு வந்தார்.

அரசியல் அமைப்பில் அம்பேத்கரின் பங்கு

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார். பவுத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டு, 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பவுத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார்.

சட்ட அமைச்சர் பதவி ராஜினாமா

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நேரு தலைமையிலான அரசு தாமதப்படுத்துகிறது என்பதாலும், இந்த சட்ட மசோதாவில் பெண்களுக்கான பிரதிநித்துவம் அளிக்க மத்திய அரசு மறுக்கிறது என்பதாலும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா
செய்தார்

அம்பேத்கர் இறுதி வேண்டுகோள்

உலகில் எப்போதாவது ஒருமுறைத் தோன்றும் அதிசயத்தைப் போல புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்.. ….. வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்..
தன் கடைசி நாள்களில் கண்ணீரோடு வாழ்ந்தார்.. ஏன் ?? அது குறித்து அவரது உதவியாளர் நானக் சந்த் ரட்டுவிடம் அவர் கூறினார்..

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர். ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன்.

என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.

இறப்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கருக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், கடந்த 1956 டிசம்பர் 6ம் தேதி தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். இவருடைய உடல் ‘‘தாதர் சவுபதி’’ கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘‘பாரத ரத்னா விருது’’ கடந்த 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

About the author

admin

Leave a Comment