செய்திகள்

எம்.கே.நாராயணனிடம் சிபிஐ விசாரணை ரூ. 360 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் புகார்

விவிஐபிக்களுக்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணனிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2004-2009 காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பிரதமர் உள்பட நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதில் ரூ. 360 கோடி அளவுக்கு லஞ்சம் தரப்பட்டு, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கடந்த காங்கிரஸ் அரசு ரத்து செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. #money-laundering-vvip-helicopter

m-k-narayanan=info

சிக்கிய விமானப் படை தளபதி:

இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

போட்டிக்கு வந்த சிகோர்ஸ்கி ஹெலிகாப்டர்:

2005ம் ஆண்டில் இந்த ஹெலிகாப்டர்களை வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட், சிகோர்ஸ்கி ஆகிய நிறுவனங்கள் மத்திய காங்கிரஸ் அரசால் இறுதி செய்யப்பட்டன. ஆனால், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களால் ஒரு குறிப்பிட்ட உயரதுக்கு மேல் பறக்க முடியாது. இந்த விஷயத்தில் சிகோர்ஸ்கி ஹெலிகாப்டர்கள் தலை சிறந்தவை.
ரூ. 350 கோடி லஞ்சம் தந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: ஆனாலும் இந்திய அதிகாரிகளுக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ. 350 கோடி லஞ்சம் தந்ததையடுத்து அந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களையே வாங்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்தது.

பறக்கும் உயரத்தை குறைத்த கமிட்டி:

இதற்காக ஹெலிகாப்டர் பறக்க வேண்டிய அதிகபட்ச உயரத்தின் அளவு குறைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன், சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவராக இருந்த வான்சூ (இவர் இப்போது கோவா ஆளுநராக உள்ளார்) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தியாவில் தலையில் கட்டிவிட்டு…

இந்தக் கூட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தையடுத்தே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க முடிந்தது. இந் நிலையில் இந்த ஊழல் விவகாரம் கடந்த 2013ம் ஆண்டு வெளியில் வந்தது. இதையடுத்து மேலும் வாங்க இருந்த ஹெலிகாப்டர்களை இந்தியா நிறுத்தி வைத்தது.

நாராயணனும் வான்சூவும்…

தற்போது எம்.கே. நாராயணனும் வான்சூவும் மேற்குவங்கம் மற்றும் கோவா மாநில ஆளுநர்களாக இருக்கின்றனர். இந் நிலையில் இவர்களையும் சிபிஐ இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்த்தது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதமும் அனுப்பியது சிபிஐ. இந் நிலையில் இன்று நாராயணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அடுத்ததாக வான்சூவிடமும் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இந்த வழக்கில் ஐரோப்பிய தரகர் ஒருவர் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாராயணன்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன், 1987ம் ஆண்டு முதல் 1992 வரை மத்திய உளவுப் பிரிவான ஐபி தலைவராகவும் இருந்துள்ளார். ஐ.பி மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா அமைப்புகளில் தனது மாநிலமான கேரளத்தைச் சேர்ந்தவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிப்பதில் மிகுந்த அக்கறை காட்டியவர் இந்த நாராயணன். கேரளத்தைச் சேர்ந்த நாராயணன் இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட இலங்கை அரசுக்கு இந்தியா உதவிகள் செய்ய முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாராயணன் ஒதுங்கினார்…

சோனியா காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமான நாராயணன், 2004-2010ம் ஆண்டு வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரானதையடுத்து இருவருக்கும் ஒத்து வராத நிலையில், நாராயணனை மேற்கு வங்க ஆளுநராக்கினார் சோனியா.

வான்சூவின் பின்னணி:

இந்த விவகாரத்தில் இன்னொரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பாரத் வீர் வான்சூவும் நாராயணனைப் போலவே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தான். இவரும் விவிஐபிக்கள் பாதுகாப்பு பிரிவிலும், ஐபி உளவுப் பிரிவிலும் பணியாற்றியவர். ஐ.பியில் மட்டும் 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். விவிஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கருப்புப் பூனைப் படையை உருவாக்கியதிலும் முக்கிய பங்கு வகித்தவர். கருப்பூப் பூனைப் படைப் பிரிவில் 18 ஆண்டுகள் இருந்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

About the author

admin

Leave a Comment