செய்திகள்

ரமணாவெல்லாம் வரமாட்டார்… பயப்படாதீங்க பில்டர்ஸ்! | Mugalivakkam Building Collapse

Mugalivakkam Building Collapse: சென்னை, முகலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் ஜூன் 28ஆம் தேதி மாலை திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் அதற்குள் புதைந்தனர். இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் கட்டடத்துக்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விதிகளைத் தளர்த்தி அனுமதி வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டட உரிமையாளர்களுக்கு ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளியுடன் தொடர்பு இருப்பதாலேயே விதி மீறல் நடந்திருக்கலாம் என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், “அனுமதி வழங்கியதில் முறைகேடில்லை… கட்டடம் கட்டியதில்தான் முறைகேடு நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் முதல்வர்.

building ramana

ரமணா

இதையெல்லாம் படிச்சதுமே… இப்படி விதியை மீறி கட்டடம் கட்டிட்டிருக்கற… கட்டப்போற யாரும் பயந்தெல்லாம் நடுங்காதீங்க. இதெல்லாம் சும்மா நாளைஞ்சு நாளைக்கு பயம் காட்டுவாங்க. கைது கூட பண்ணுவாங்க. மீடியாக்கள்லயும் செய்தியா வந்து குவியும். ஒரு வாரம் போயிடுச்சுனா… எல்லாம் அடங்கிடும். என்ன புரிஞ்சுதா?
விஜயகாந்த் நடிச்ச ‘ரமணா’ படத்துல வர்றது மாதிரியேதான் இருக்குது இந்தக் கொடுமைனு ஊர் பூரா பேச்சா இருக்கு. ஆனா, இதுக்காக ‘ரமணா’ வந்துடுவாருனு பயப்படாதீங்க. என்னிக்காச்சும் சினிமா போலீஸ் மாதிரி நிஜ போலீஸை பார்த்திருக்கீங்களா… அதேபோலத்தான் இதுவும். சினிமா ரமணாவுக்கெல்லாம் உயிர் வரப்போறதே இல்ல!

பின்குறிப்பு: ‘‘கட்டடம் கட்டியதில் விதி மீறல் இல்லை… இடிவிழுந்ததுதான் காரணம்’’ என்று கட்டுமான நிறுவனத்தின் தரப்பிலிருந்து காரணம் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக எத்தனையோ கோயில்கள் உயர்ந்து நிற்கின்றன. இந்தக் கோயில்களில் எல்லாம் இடி தாங்கி கண்டுபிடிக்கப்படாத காலத்துக்கு முன்பே கட்டப்பட்டவை. சில கோயில்களில் அவ்வப்போது இடி தாக்கியது உண்டு. இதன் காரணமாக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் ஏதாவது ஒரு சிற்பமோ… அல்லது கலசமோ சேதமடைந்தது உண்டு. ஆனால், ஒரு கோயிலே இப்படி இடி தாக்கி சீட்டுக்கட்டு போல சரிந்த வரலாறு இல்லை.

இதுவும் ஒரு தகவலுக்காக… அதாவது ஜெனரல் நாலேட்ஜுக்காகத்தான் சொல்றேன். இதை வெச்சுக்கிட்டு உங்க மேல நடவடிக்கை எடுத்துவாங்கனு பயப்படாதீங்க பில்டர்ஸ். நம்ம ஊருல இன்னும் நிறைய ஏரி, குளம், வாய்க்கால் எல்லாம் இருக்கத்தான் செய்யுது. குறிப்பா செம்பரம்பாக்கம்னு ஒரு ஏரி பல நூறு ஏக்கர்ல விரிஞ்சு கிடக்கு. அப்புறம் மதுராந்தகம் ஏரினு ஒண்ணு இருக்கு. அதுவும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலயே இருக்கு. முயற்சி பண்ணினா முடியாததில்ல… ட்ரை பண்ணுங்க… 11 மாடி என்ன 111 மாடிக்கு கூட அனுமதி கிடைச்சுடும். என்ன உங்களுக்கும் கரை வேட்டி ஏதாச்சும் தோழனா இருக்கணும் அவ்வளவுதான்!–vikatan.com

About the author

admin

Leave a Comment