பட்டுக்கோட்டை செய்திகள்

பொன்விழா கொண்டாடும் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி சிறப்பு நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின்  (Pattukottai Municipality) பொன்விழாவையொட்டி ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

jayalalitha

பட்டுக்கோட்டை நகராட்சியின்  (Pattukottai Municipality)

இதுகுறித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா 110வது விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டு கூறியதாவது:
பண்டைய சிற்பங்களுக்கும், பழமை வாய்ந்த கோயில்களுக்கும் பெயர் பெற்றதும், பெயரிலேயே வளத்தை பிரதிபலிப்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தின் தன்னிகரற்ற நகரமாக விளங்குவதும், காவேரி ஆற்றில் இருந்து பிரியும் கல்லணை கால்வாயில் அமைந்துள்ளதுமான பட்டுக்கோட்டை நகரம், 1.4.1965 அன்று நகராட்சியாக உருவாக்கப்பட்டு, பின்னர் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு பொன் விழாவை கொண்டாட இருக்கிறது.
வரலாற்றுப் பாரம்பரியமும், சிறப்பும் கொண்ட இந்த பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், அமைந்துள்ளது. இந்த நகராட்சியில், 33 வார்டுகள், 73 கிலோ மீட்டர் சாலைகள், 2,883 தெரு விளக்குகள், 5 பூங்காக்கள், 21 ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன. பட்டுக்கோட்டை நகராட்சி தொடங்கப் பெற்று 49 ஆண்டுகள் முடிவடைந்து, பொன்விழா ஆண்டான 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழா காணும் இத்தருணத்தில், அதன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்திட அரசிடம் நிதி கோரி பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் இது குறித்து என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியாக தமிழக அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதி அடிப்படை மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக, குடிநீர் வினியோகம், பஸ் நிறுத்த மேம்பாடு, அரசு அலுவலக கட்டிட மேம்பாடு போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.

About the author

admin

Leave a Comment