செய்திகள்

ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த மாதம் 8ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் (railway budget), 9ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், 10ஆம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.

Tamil-News-pattukkottai

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்ததாவது:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜூலை மாதம் 7ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டை 8ஆம் தேதி தாக்கல் செய்வதென்றும், அதற்கடுத்த நாளான 9ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

10ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அவசரச் சட்டங்களை சட்டமாக இயற்ற நடவடிக்கை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மத்திய அரசால் இதற்கு முன்பு கொண்டு வரப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான அடக்குமுறைகளை தடுக்கும் அவசரச் சட்டம், போலாவரம் திட்டம் தொடர்பான அவசரச் சட்டம், “டிராய்’ தொடர்பான அவசரச் சட்டம், “செபி’ தொடர்பான அவசரச் சட்டம் ஆகியவற்றை சட்டமாக்கும் வகையில் மசோதா கொண்டு வருவதென்று முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த மாதம் 3ஆவது வாரத்துக்கு முன்னதாக அவசரச் சட்டங்கள் அனைத்தையும் மசோதாக்களாக கொண்டு வருவதென்று தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மொத்தம் 28 அமர்வுகள் உள்ளன. தேவைப்பட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மோடி அரசின் முதல் பட்ஜெட்

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ஆண்டொன்றுக்கு ரூ.2 லட்சமாக தற்போது உள்ளது. இதனை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது. ஆதலால், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலால் மற்றும் சுங்க வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவால் தெரிவிக்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகள் அறிவிப்புகளாக மத்திய பட்ஜெட்டில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

மக்களவைத் துணைத் தலைவர்

16ஆவது மக்களவையின் தலைவராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமித்ரா மகாஜன் கடந்த 6ஆம் தேதி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

எனினும், மக்களவைக்கு துணைத் தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படாமல் உள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களவைத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நடைபெறும்’ என தெரிவித்திருந்தார். அதன்படி, மக்களவைத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்

மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்குத் தேவையான 10 சதவீத இடங்களில் எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி 8.1 சதவீத இடங்களில், அதாவது 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் எந்தக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து முடிவு செய்வேன்’ எனத் தெரிவித்திருந்தார். ஆதலால் இந்தக் கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தெரிந்து விடும்.

எதிர்க்கட்சிகள் திட்டம்

இதனிடையே மத்திய பாஜக அரசு கடந்த வெள்ளிக்கிழமையன்று, பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணத்தை 6.5 சதவீதமும் திடீரென அதிகரித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையும், ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த காலத்தில், இளம்பெண் ஒருவரை கண்காணிக்க அந்த மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைப்பதென முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு கைவிட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆதலால், ரயில் கட்டண உயர்வு, மோடிக்கு எதிராக எழுப்பப்பட்ட இளம்பெண் கண்காணிப்பு விவகாரம் உள்ளிட்டவற்றை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது.

About the author

admin

Leave a Comment