செய்திகள்

தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடிக்கு ரூ. 9.19 கோடி ஒதுக்கீடு

குறுவை சாகுபடி (samba kuruvai cultivation) சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ. 9.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா. தஞ்சை ஆட்சியரகத்தில் தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

pattukkottaiinfo-Tamil -News

கூட்டத்துக்கு ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். வேளாண் இயக்குநர் மு. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சந்தீப் சக்சேனா பேசியது:

குறுவை சாகுபடியை மேற்கொள்ள 7 அம்ச திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 12 மணி நேர தடையில்லாத மும்முனை மின்சாரம், நீர் ஆதாரங்களில் இருந்து வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில் 600 அடி குழாய்கள் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் வழங்கப்படுதல் என்பது உள்ளிட்ட 7 அம்ச திட்டங்களை செயல்படுத்துவதற்காக டெல்டா முழுமைக்கும் ரூ. 32.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.9.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காவிரி நீர் வரும்போது வாய்க்கால் பாசனம் மூலம் 13,000 ஹெக்டரிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பயன்படுத்தி 31,000 ஹெக்டரிலும் என மொத்தம் 44,000 ஹெக்டரில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 5,790 ஹெக்டரிலும், இயல்பான சாகுபடி முறையில் 3,167 ஹெக்டரிலும், என மொத்தம் 8,907 ஹெக்டர் நிலப்பரப்பிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்கு தேவையான தரமான சான்று பெற்ற ஆடுதுறை-43, ஆடுதுறை-45 ரக நெல் விதைகள் 41 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், 103 மெட்ரிக் டன் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா 6,532 மெட்ரிக் டன் கூட்டுறவு நிறுவனங்களிலும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது. டி.ஏ.பி 1991 மெட்ரிக் டன் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது. பொட்டாஷ் 1215 மெட்ரிக் டன் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது என்றார் சந்தீப் சக்சேனா.

கூட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளர் எம். செந்தில், மூன்று மாவட்ட வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், மின்சார வாரியம், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

About the author

admin

Leave a Comment