You Are Here: Home » பிரபலங்கள் » பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு எனும் அழகிய கிராமத்தில் அருணாசலம் – விசாலாட்சி தம்பதியருக்கு பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். கவிஞரின் மனைவி கௌரவம்மாள்; மகன் குமாரவேலு. மனைவிக்குக் கடிதம் எழுதினாலும், தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவார் கவிஞர்; அவர் திருமணம் பாவேந்தர் தலைமையில்தான் நடைபெற்றது. கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டார்.

சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டையாருக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தியில் பாடல்கள் எழுதினார். முதல் பாடல் ஜனசக்தியில் 1954இல் வெளிவந்தது. ஜீவாவின் உதவியால் பொதுவுடைமை இயக்க நாடகமான கண்ணின் மணிகள் நாடகத்திற்கும் பாடல்கள் எழுதினார், திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்புத் தேடி பட்டுக்கோட்டையார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல, அதுவும் பல நாட்களில் பட்டினியோடு. 1954ஆம் ஆண்டு முதல் முதலாக படித்த பெண் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதினார். கவிஞரின் இரண்டாவது படம் மஹேஸ்வரி, 1956இல் முதன்முதலாக பட்டுக்கோட்டையாரின் பாடல்களைத் தாங்கி வெளிவந்தது. நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேரமும் பாடல்கள் எழுதுவதில் ஈடுபட்டார். 1956ஆம் ஆண்டிலேயே பாசவலை படம் வெளிவந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட கவிஞர் ஆனார். அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இறுதி நாள் வரை தொடர்ந்தது.

எம்.ஜி.ஆர்- சிவாஜி படங்களில் கல்யாணசுந்தரத்துக்கு வெற்றிமேல் வெற்றி குவியத் தொடங்கியது. 1956-க்கு பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களோடு பல படங்கள் வெளிவர தொடங்கின. குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் தத்துவப் பாடல்கள் இடம் பெற்றன. அவை அவரை புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்றன.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’,  ‘அரசிளங்குமரி’, ‘கலை அரசி’, ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மகாதேவி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘திருடாதே’ போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த ‘மக்களை பெற்ற மகராசி’, ‘அம்பிகாபதி’, ‘இரும்புத்திரை’, ‘உத்தமபுத்திரன்’, ‘பதிபக்தி’, ‘தங்கப்பதுமை’, ‘பாகப்பிரிவினை’, ‘புனர் ஜென்மம்’ போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.

டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணபரிசு’ படத்துக்கு எழுதிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

புகழின் உச்சியில் இருந்தபோது 1959-ம் ஆண்டு மத்தியில் கல்யாணசுந்தரத்துக்கு மூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. பிறகு அவர் வீடு திரும்பினார். மறுபடியும் மூக்கில் தொந்தரவு ஏற்படவே அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் 8-10-1959 அன்று மரணம் அடைந்தார்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவருக்கு 29 வயதுதான். சென்னை ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில் உள்ள எண் 15 வீட்டில் குடியிருந்து வந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சந்திரபாபு, டைரக்டர்கள் பீம்சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார். 1993ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாஅவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு மணிமண்டபம் அரசால் கட்டப்பட்டு 2000ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மக்கள் கவிஞரின் புகைப்படங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அடங்கிய முதல் தொகுப்பு 1965ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டு நிறுவனத்தால் பி.இ.பாலகிருஷ்ணன் முயற்சியால் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. பின்னர் கவிஞரின் பாடல்கள் அடங்கிய நூல்கள் பலரால் வெளியிடப்பட்டது. கே.ஜீவபாரதி கவிஞரின் பாடல்களை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பா.உதயகுமார், சு.சாலமன் பாப்பையா, இ.செம்பியன், எம்.பி.மணிவேல், பா.வீரமணி, தா.பாண்டியன், இராகுலதாசன், தில்ரூபாசண்முகம் என பலர் கவிஞர் பாடல்களை ஆய்வு செய்து எழுதியுள்ள ஆரிய நூல்கள் வெளிவந்துள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் குறித்த ஆய்வு இருக்கை ஒன்று இயங்கி வருகிறது

மேலும் பட்டுக்கோட்டையார் பற்றி தகவல் அறிந்துகொள்ள http://www.pattukkottaiyar.com  பார்க்க.

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top