நம்பிக்கை நாயகி ஆங் சாங் சூ கி | Aung San Suu Kyi

ஆங் சாங் சூ கி (Aung San Suu Kyi), 1945-ஆம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி ரங்கூனில் பிறந்தார். அப்பா, பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். ஆங்கிலேயரிடம் இருந்து பர்மா விடுதலை பெற, முக்கியக் காரணமாக இருந்தவர். விடுதலை பெற்ற ஆண்டே எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தின் உச்சம். சூ கி-க்கு அப்போது இரண்டு வயது.

உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள்.இவரின் அன்னை இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டதால், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு இந்தியாவில் கழிந்தது. அதனால், ‘இந்தியாவையும் என் அன்னை மண் போலவே உணர்கிறேன்’ எனச் சிலாகித்துக் குறிப்பிட்டு உள்ளார். லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் அரசியலில் பட்டம் பெற்று, ஆக்ஸ்ஃபோர்டு நகரில் தொடர்ந்து படித்தார். அதற்குப் பின், ஐ.நா சபையில் வேலை பார்த்தார். கல்லூரிக் காலத்தில் பழக்கமான மைக்கேல் ஆரிஸை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

தாய்க்கு உடல்நிலை சரியில்லை என அறிந்து அவரைப் பார்க்கச் சொந்த நாட்டுக்கு வந்தார். பர்மா மக்களை வறுமையும் துன்பமும் வாட்டி எடுப்பதையும், அதைப் பற்றிக் கவலைப்படமால் ராணுவ அரசாங்கம் செயல்படுவதையும் கண்டு வருந்தினார். தாய் நாட்டிலேயே தங்கி இருந்து போராடுவது என அன்னையின் மரணத்தின்போது முடிவு எடுத்தார்.
‘மக்களுக்கு முதலில் ஜனநாயகம் தேவை’ என்று நினைத்தவர், தைரியமாக ஜனநாயக லீக் கட்சியைத் தொடங்கினார். அதனை மக்கள் அன்போடு வரவேற்றனர். ராணுவ அரசாங்கம் இவருக்கு உண்டான ஆதரவைப் பார்த்துக் கொதித்தது. இவரை வீட்டுச் சிறையில் வைத்தது.

அதுவரை ஆயுதம் ஏந்தியும் வன்முறையில் நம்பிக்கைகொண்டும் இருந்த மக்களை அமைதி வழிக்குத் திருப்பினார். அரசாங்கம், தேசம் ஆகியவற்றையும் தாண்டி அற்புதங்களைச் செய்யக்கூடியது அமைதி மட்டும்தான் என மக்களுக்கு அறிவுறுத்தினார். தான் இந்தப் போராட்ட முறையைக் கைக்கொள்வதற்குக் காரணமாக அமைந்தது மகாத்மா காந்தியின் வாழ்க்கை எனப் பெருமையோடு குறிப்பிடுவார்.

யாரையும் பார்க்கக் கூடாது, தொலைபேசி வசதியும் கிடையாது, சேதம் அடைந்த, பழமையான வீட்டில் பல சமயம் மின்சாரம் இருக்காது. பெரும்பாலும் மெழுகுவத்தி வெளிச்சம்தான். வயதான இரண்டு பெண்கள்தான் உதவிக்கு என்ற நிலையில் 20 ஆண்டுகள் அந்தத் தனிமைச் சிறையில் வாடினார்.

1990-ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், 485 இடங்களில் போட்டியிட்டு, 392 இடங்களில் ஜெயித்துக் காட்டினார். ஆனால், இந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவித்த ராணுவ ஆட்சியாளர்கள், ஆங் சாங் சூ கியின் கட்சிக்குத் தடை விதித்தனர். எனினும், மக்கள் தொடர்ந்து தங்களின் நம்பிக்கை நாயகிக்கு ஆதரவு தந்தனர். அகிம்சை வழியில் போராடியதற்காக, 1992-ஆம் வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1995-ஆண்டில் தன் கணவர் உயிர் பிரியும் நிலையில் இருந்ததால், லண்டனில் உள்ள கணவரைப் பார்க்க அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். ”போகலாம். ஆனால், திரும்பி வரக் கூடாது’ என உறுதிமொழி கேட்டது அரசு. தீர்க்கமாக மறுத்து, கணவரின் மரணத்திற்குக்கூடப் போகாமல் வீட்டுச் சிறையிலேயே கம்பீரமாக இருந்தார்.

உலக நாடுகளின் பார்வையில் விழுந்த ஆங் சாங் சூ கியை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ராணுவ அரசு, கடந்த 2010-ல் அவரை விடுதலை செய்தது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் மொத்தம் இருந்த 45 தொகுதிகளில் 42-ல் இவரின் கட்சி வென்றது.

”வாழ்க்கை முழுக்கப் போராட்டத்தில் கழிந்ததில் வருத்தம் இல்லை. என் மக்களின் வாழ்க்கை என்றைக்காவது ஒரு நாள் மாறும் என்கிற நம்பிக்கையில் தொடர்கின்றன என் செயல்கள்” என்கிறார் ஆங் சாங் சூ கி.

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago