பிரபலங்கள்

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai-Alagiri
Written by admin

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப் பெரியாரைப் பின்பற்றியவர்; தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று வாழ்ந்தவர். மலை குலைந்தாலும் மனம் குலையாத கொள்கை மறவன். சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்கு! சாதி, மத, மூட நம்பிக்கைகளை எதிர்த்துத் தினம் மேடையமைத்துப் பரப்புரை செய்துவந்தவர்.

Pattukkottai Alagiri

பட்டுக்கோட்டை அழகிரிசாமி இளமைக்காலம் (Pattukkottai Alagiri)

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23-06-1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்துவிட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடை மருதூர் கிராமத்தில் வளர்ந்தார் மதுரையில் உள்ள பசுமலை அமெரிக்கன் உயர் நிலைப்பள்ளியில் இறுதிவகுப்பு வரை பயின்றார்.

முதலாம் உலகப் போரின் போது, 1914-1918 தனது முன்னோர்களைப் பின்பற்றி இராணுவத்தில் சேர்ந்து பணிபரிந்தார்.இராணுவப் பணியின் போது மெசபடோமி யாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பிரிட்டிஷ் இராணுவத்தினர் இந்தியப் படை வீரர்களைத் தவிக்க விட்டு விட்டு இங்கிலாந்து சென்றுவிட்டனர். அழகிரி, கவலைப்படாமல் கடல்வழியாகக் கல்கத்தா வந்தடைந்தார். கல்கத்தாவில் சிறிது நாள்கள் தங்கிவிட்டு, தனது சித்தப்பா வேணுகோபால் நாயுடு இல்லம் சென்று தங்கினார். அகவை 20 இல், தனது அத்தை மகள் எத்திராஜ் என்பவரை 1920 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் மக்களும் மூன்று பெண்மக்களும் அவர்களுக்குப் பிறந்தனர்.

அரசியல்

கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராகச் சேர்ந்தார். ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.

அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைப்பயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்.

சேரன்மாதேவி குருகுலம்

பட்டுக்கோட்டைக் கூட்டுறவுச் சங்கமொன்றில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார். 1925 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் அளிக்கும் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கருத்தை ஏற்று வ.வே.சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு.ஐயர்) சேரன்மா தேவி என்ற ஊரில் தேசியக் கல்வி நிலையம் (குருகுலம்) ஒன்றை நிறுவினார். அப்பொழுது தமிழ்மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தவர் பெரியார்.

குருகுலத்திற்குப் பொதுமக்கள் நிதி உதவினர். காங்கிரஸ் உரூபாய் 10,000/ நிதி வழங்க ஒப்புக்கொண்டது. முதல் தவணையாக உரூபாய் 5,000/- க்குக் காசோலை வழங்கினார் பெரியார்.

அந்தக் குருகுலத்தில் வர்ணாசிரம தர்மம் கடை பிடிக்கப்படுகிறது என்று பெரியார் அவர்களுக்குச் செய்தி கிடைத்தது; சீற்றம் கொண்டார். குருகுலத்திற்குத் தரவேண்டிய உரூபாய் 5,000/- தர இயலாது என்று பெரியார் கூறிவிட்டார். ஆனால், இன்னொரு பார்ப்பனச் செயலாளரிடம் காசோலையைப் பெற்றுக் கொண்டார் வ,வே.சு,ஐயர்.

பெரியார் இதனால் வெகுண்டெழுந்து குருகுலத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். காந்தியாருக்குச் செய்தி அறிவிக்கப் பட்டது. ஓரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து உணவு உண்ண விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வினை மதித்திடவேண்டும் என்ற காந்தியாருடைய கருத்து 12 மார்ச் 1925 அன்று “இந்து” பத்திரிக்கையில் வெளியாயிற்று. பெரியார் அதனால் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தினார்.

இந்நிலையில், பிராமணரல்லாத மாணவர், பிராமண மாணவர்க்கென வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பானை யிலிருந்து தண்ணீர் அருந்தினார் என்று அந்த மாணவ ரைக் குருகுலக் காப்பாளர்கள் அடித்து விட்டனர் அதனை அறிந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி (Pattukkottai Alagiri) குருகுலத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.

Pattukkottai-Alagiri

சுயமரியாதை எல்லோர்க்கும் வேண்டும்

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் அழகிரிக்கு இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பதவி வாய்த்தது. பசுமலையில் போர் ஆதரவுக் கூட்டங்களில் போருக்கு ஆதரவாய்ப் பேசாமல் சுயமரி யாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார். அவரின் எதிரிகள் சென்னை ஆளுநருக்கு அழகிரி தன்னுடைய பதவியை முறைகேடாகப் பயன்படுத்து கின்றார் என்று முறையீடு செய்தனர். ஆளுநர் ஆய்வு செய்திட வந்தார். நீர் போர்ப் படைக்கு ஆள் தெரிந்தெடுக்காமல், கட்சிப் பணி புரிவ தாகக் குற்றம் சாட்டியுள்ளனரே என்று வினவினார். அதற்கு அழகிரி, என் பேச்சால் இராணுவத்தில் இளைஞர்கள் சேர்கின்றார்களா என்று மட்டும் பாருங்கள். என் கட்சிப் பணியைப் பற்றிக் கவலை தங்களுக்கு வேண்டியதில்லை, என்றார். ஆளுநர், உங்களை எச்சரித்து அனுப்புகின்றேன், என்றார். அழகிரி அதற்கு, நான் தவறேதும் செய்யவில்லை. தங்கள் மன்னிப்போ, எச்சரிக்கையோ தேவையில்லை. இந்த வேலையும் வேண்டாம், என்று கூறிவிட்டுப் பணியிலிருந்தும் விலகிவிட்டார்; காரணம் சுயமரியாதை உணர்வு.

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில், புகழ் பெற்ற நாதசுவர இசைக் கலைஞர் சிவக்கொழுந்து அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது; இசைக்கலைஞர் தோளில் துண்டு அணிந்து கொண்டிருந் தார். அதனைக் கண்ட ஆதிக்கச் சாதியினர், ‘சிவக்கொழுந்து தோளிலுள்ள துண்டை எடு’ என்று கோபக்குரலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இசைக்கலைஞர் சாதிய அமைப்பில் கீழ்ச் சாதியைச் சார்ந்தவர்; மேல் சாதியினர் முன்னிலையில் கீழ்ச் சாதியினர் தோளில் துண்டு அணிதல் கூடாது என்பது சனாதன தர்மம்; ஆதலின் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆங்கே கூட்டத்தில் இசையைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த பட்டுக்கோட்டை அழகிரி (Pattukkottai Alagiri), நீங்கள் தோளில் போட்டுள்ள துண்டை எடுக்கவேண்டாம்; எவர் என்ன செய்கிறார் என்று நான் பார்க்கிறேன்; நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள், என்று சிம்மம் எனக் கர்ஜித்தார். அழகிரியின் தோற்றமும் குரலில் இருந்த உறுதியும் சாதிவெறிக் கும்பலை அடக்கிற்று.

செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு

17-2-1929 அன்று செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது அம்மாநாட்டில் பி.டி.இராஜன் மாநாட்டுக் கொடியை ஏற்றினார். முதலமைச்சர் டாக்டர்.சுப்பராயன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ.சௌந்திரபாண்டியன் தலைமையில் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் ஈ.வெ.ரா.நாகம்மையார், ஆர்.கே. சண்முகம், எஸ்.இராமநாதன், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் உரையாற்றினர். இந்த மாநாட்டில் பட்டுக் கோட்டை அழகிரிசாமி எழச்சியுரையாற்றினார். இம் மாநாட்டிற்குப் பின் பல கலப்புத் திருமணங்களும், விதவைத் திருமணங்களும் நடைபெற்றன. அந்தத் திருமணங்கள் சீருடனும் சிறப்புடனும் நடந்திட அஞ்சா நெஞ்சர் அழகிரி உறுதுணையாக இருந்து வேண்டும் ஏற்பாடுகளைச் செய்தார்.

திருவாரூரில் இந்தித் திணிப்பை எதிர்த்து அஞ்சா நெஞ்சன் சிம்மம் எனக் கர்ஜித்தார். இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் தமிழர்களே என்று இடியின் ஓசையை மிஞ்சும் பெருங்குரலெடுத்து உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். பேசி முடித்ததும் குருதி கக்கி மயங்கி விழுந்தார். அடி வயிற்றிலும், விலாவிலும் தாங்கமுடியாத வலியில் துடி துடித்தார். அங்கே நின்றுகொண்டு அவரது உணர்ச்சியைத் தூண்டும் சொற் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன்,எதனால் இப்படி இவர் துடி துடிக்கிறார்? துன்பப்படுகிறார்? ஏன்? என்று வினவினார். அவர் நோயாளி என்றனர் கூடியிருந்தோர் நோயாளியான இவர் ஏன் இப்படிக் கத்திப் பேசவேண்டும் என்று கேட்டான் அந்தச் சிறுவன். சிறுவனின் வினா அழகிரி யின் செவியில் விழுந்துவிட்டது. அந்தச் சிறுவனை அன்போடணைத்து, தம்பி, என்னைவிட இந்த நாடு நோயாளியாக இருக்கிறது! டாக்டருக்கு காய்ச்சல் என்பதற்காக மிகவும் மோசமாக நோய் கண்டவனைக் கவனிக்காமலிருக்க முடியுமா?அது போலத்தான் நான் பணியாற்றுகிறேன் என்றார் அஞ்சா நெஞ்சர். பக்கத்தில் நின்று கேள்வி கேட்டச் சிறுவன் சிந்திக்கலானான். அவர் தான் பின் நாளில் கலைஞர் கருணாநிதி என அறியப் பட்டவர். திருவாரூர் நிகழ்வுக்குப் பின்னர் தோழர் பட்டுக்கோட்டை அழகிரி முழுமூச்சுடன் இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தின் தளபதியாக நடைப்பயணத்தை அடலேறு என வழி நடத்திச் சென்றார்.

இந்தி எதிர்ப்புப் போர்

1-8-1938 அன்று அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி தலை மையில் திருச்சியருகிலுள்ள உறையூரிலிருந்து தமிழர் படை அணிவகுத்து சென்னை நோக்கிப் பயணமாயிற்று. அந்த அணியில் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம் மையார், நகரதூதன் ஆசிரியர், மணவை. திருமலைச் சாமி, பாவலர் பாலசுந்தரம், திருப்பூர் மொய்தீன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

அழகிரிசாமி, சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளிப் பேச்சாளர். தனக்கென எதுவும் வேண்டாதவர். நாட்டுப் பணிக்கே தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

அழகிரிக்குக் கோடையிடிப் பேச்சாளர் என்றொரு பெயரும் உண்டு. நெடிதுயர்ந்த உருவம், சுமார் 6 அடி உயரம். அதற்கேற்ற வாறு அகன்று விரிந்த மார்பு, நீண்ட நெடிய கைகள், இரணுவ நடை, எளிய வாழ்க்கை. அவர் தலைமையில் தமிழர் பெரும் படை திருச்சி உறை யூரிலிருந்து சென்னை நோக்கி நடைப் பயணம் கிளம்பிற்று.

மூவலூர் இரமாமிர்தம் அம்மையார் சமூகச் சேவைக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்; பல நற்றொண்டுகள் ஆற்றியவர். விதவைத் திருமணங்கள் பலவற்றை நடத்தி வைத்தவர்; சுயமரியா தைக் கருத்துகளை பரப்புரையாற்றி வந்தவர்; அந்த அம்மையார் வழி நெடுக தமிழர் படைக்கான உணவி னைத் தயாரிக்கும் பணியினை ஏற்றுக்கொண்டார்.

‘நகர தூதன்’ ஆசிரியர் மணவை திருமலைச்சாமி அரசியல் கருத்துகளை நெஞ்சைத் தொடும் வண்ணம் எழுதும் ஆற்றல் பெற்றவர். அவரும் தமிழர் படைக்கு ஒரு தளபதியாகத் திகழ்ந்தார்.

இந்த இந்தி எதிர்ப்புப் படையினர் வழி நெடுகிலும் புரட்சிப் பாவேந்தர் எழுதிய இந்தி எதிர்ப்புப் பாடலை பாடிய வண்ணம் உற்சாகத்துடன் நடை பயின்றனர்.

எதிர்ப்போர் இல்லாமலா?

சிற்றூர் சாலை ஒன்றில் இந்தி ஆதரவு காங்கிரசார் செருப்புக்களைத் தோரணமாகக் கட்டி, தமிழர் படையி னருக்கு வரவேற்புத் தந்தனர்-அவமானப்படுத்தினர். அந்த ஊரிலிருந்த தமிழ் உணர்வாளர்கள், அந்தச் செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிய முனைந்தனர். அஞ்சா நெஞ்சன் அவர்களைத் தடுத்து, அந்தத் தோர ணத்திற்கு முன் நின்று கொண்டு பேசத் தொடங்கினார்.

உனக்கும் எனக்கும் உரிமையான தமிழுக்கு வருகின்ற தீங்கை எதிர்த்து இந்த சுட்டெரிக்கும் வெய்யி லிலே பாதங்கள் கொப்பளிக்க நடைப்பயணம் செய் கின்றோம் தோழர்களே! நீங்கள் தோரணமாய் கட்டி யிருக்கின்ற செருப்புகளை எங்கள் மீது வீசியிருந்தால் அதை எங்கள் கால்களில் அணிந்து கொண்டு நடந்திருப் போம் என்று பேசத் தொடங்கினார். கூடியிருந்த நல் லுள்ளம் கொண்ட மக்கள் அந்தத் தோரணத்தை அவிழ்க்க முனைந்தனர்..

அழகிரி அவர்களைத்தடுத்து, கட்டியவர்களே அவிழ்க் கட்டும் என்றார்.

இறுதியாக அழகிரி, இன்னும் சிறிது காலத்தில் செருப்புத் தோரணம் கட்டியோர் இறந்திடுவர், நானும் என் இயக்கத்தினரும் இறந்திடுவோம். வருங்காலச் சந்ததிகள் எங்கள் சமாதிகளைப் பார்த்து எங்கள் மரியாதைக்குரிய வாழ்வுக்கு வழி வகுத்தத் தொண் டர்கள் என்று மலர் தூவி நன்றி செலுத்துவார்கள். ஆனால் செருப்புத் தோரணம் கட்டி எங்களை இழிவு செய்கிற தோழர்களே உங்களது சமாதிக்கு உங்கள் சந்ததியினர் கூட வரமாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் உங்கள் சமாதியில் எச்சமிட்டுவிட்டுப் போகும். என்று தன் சொற்பொழிவினை முடித்தார்.இதனைக் கேட்ட தோரணம் கட்டிய தோழர்கள் கண்ணீருடன் செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்துவிட்டு மன்னிப்புக் கேட்டனர்.அதுமட்டுமன்றி, தமிழர் படைக்குத் தேநீர் விருந்தும் நடத்தி வழியனுப்பி வைத்தனர்.

ஈரோடு-திராவிடர் கழக மாநாடு

1948,அக்டோபர் 23, 24 ஆகிய நாள்களில் இந்தியை எதிர்த்துத் திராவிடர் கழகத் தனி மாநில மாநாடு ஈரோட்டில் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமியின் பேச்சு மாநாட்டில் கூடியிருந்த தொண் டர்கள் அனைவரின் நெஞ்சை உருக்கும் தன்மையில் அமைந் திருந்தது.

தோழர்களே! இந்த மாநாட்டிற்குப் பின் சிறை செல்ல நேரிடும். எனவே,அவ்வகையில் இது கடைசி மாநாடு என்றெல்லாம் பத்திரிக்கையில் பார்த் தேன். என்னைப் பொறுத்தவரையில், என் உடல் நிலையைக் கவனித்தால், எனக்கு இதுவே கடைசி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு என் இறுதி வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்ளவே இன்று இங்கு வந்தேன். என் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. நோயினால் படுத்த படுக்கையாக இருந்து வந்தேன். இனி என் உடல் தேறும் வரை நான் இயக்கப் பணியில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றேன். இது எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது, என்றார்.

அழகிரிக்கு அதுவே கடைசி மாநாடாக அமைந்து விட்டது.நோயில் விழுந்தவர் மீண்டு வரவில்லை.

ஈரோடு மாநாடு நடைபெற்று முடிவுற்றதும் அண்ணா, அழகிரியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். சென்னைக்கு அவரை அழைத்து வந்து தாம்பரம் என்புருக்கு நோய் மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் செய்திட ஏற்பாடு செய்தார். பொதுக்கூட்டங்களுக்குத் தன்னை அழைக்கும் தோழர்கள், அழகிரியின் மருத்துவச் சிகிச்சைக்காக ரூபாய் நூறு அழகிரியின் குடும்பத்திற்கு காசோலை அனுப்பிவிட்டு, அந்த இரசீதை தனக்கு அனுப்பிவைத்தால்தான் கூட்டங்களுக்கு ஒப்புக்கொள்வ தாக அண்ணா அறிவித்தார். அதற்கேற்பத் தோழர்கள் பலர் அழகிரியின் குடும்பத்திற்கு நிதி அனுப்பினர். ஆயினும், தாம்பரம் மருத்துவமனை அழகிரியைக் கைவிட்டது; இயற்கையும் அவரைக் கைவிட்டுவிட்டது அவரைப்பற்றிய காச நோய் 28-3-1949 அன்று நம்மிடமிருந்து அவரின் உயிரைப் பறித்துவிட்டது!

நினைவு போற்றல்

‘நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30 ஆண்டு கால நண்பரும், மனப்பூர்வமாக நிபந்தனை இன்றி நமது கொள்கைகளைப் பின்பற்றிவருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்துத் தொண்டாற்றியவர். அவரது முழு வாழ்க்கையிலும் இயக்கத்தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. விளையாட்டுக்குக் கூடக் கொள்கையை விலை பேசி இருக்க மாட்டார்’. என்று இரங்கல் செய்தி விடுத்தார் பெரியார்.

அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்ற கலைஞர் மு. கருணாநிதி. தன் மகனுக்கு மு. க. அழகிரி என்று பெயர் சூட்டினார். மேலும் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற காலத்தில் தான் முதல்வாரான போது தன் சொந்தச் செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையைப் பட்டுக்கோட்டையில் நிறுவினார். அதன் பிறகு கடந்த 2007ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி உள்ளார்.

எம்.ஜி.ஆர் முதல்வராக வந்த போது அவரும் அழகிரிக்கு மரியாதை செய்யும் விதமாக பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகம் தொடங்கினார்.

திராவிடர் கழக வரலாறு தந்தை பெரியாரின் தலைமையில் கல்லடியும் சொல்லடியும் பெற்ற வீர மறவர்களைக் கொண்டதாகும்! இந்த வீரர் வரிசையில் வந்த முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி! அவர் வழி நின்று எந்நாளும் சுயமரியாதை காப்போம்!

பட்டுக்கோட்டை அழகிரிசாமி புகழ் வாழ்க!

About the author

admin

Leave a Comment