செய்திகள்

நதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு

மத்திய அரசின் அதிகாரத்தினுள் நதிகள் வர வேண்டும் என்று வாதிட்டவர் அம்பேத்கர்

காவிரி நதி நீர்ப் பங்கீடு விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் இன்றையச் சூழலில், இந்திய நீராதாரக் கொள்கை மற்றும் நதி நீர் மேலாண்மை குறித்து அம்பேத்கரின் பங்களிப்பை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தத்துவம், சமூகவியல், பொருளியல், அரசியல் சட்டம், தொழிலாளர் நலன் என்று விரிந்து பரந்த அம்பேத்கரின் அறிவுசார் பங்களிப்பில் நீர் மேலாண்மையும் ஒன்று.

அம்பேத்கர் 1942-1946 ஆண்டுகளில் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் நலன், பாசனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். அந்த நான்கு ஆண்டுகளில் அத்துறைகளில் அவர் செய்த சாதனைகள் இன்றைக்கும் நமக்கு வழிகாட்டுகின்றன. தொழிலாளர் நலச் சட்டங்கள், இந்தியாவின் முதல் மின்சாரக் கொள்கை, இந்தியாவின் நீர்க் கொள்கை மற்றும் பெரிய நதிகளின் பன்முக பயன் திட்டங்கள் என்று பலவும் அவரின் முயற்சியால் அப்போது உருவாக்கப்பட்டன.

தேசிய நீராதாரக் கொள்கை

அம்பேத்கர் அமைச்சராக பதவியேற்கும் வரை இந்தியாவில் நீராதாரக் கொள்கை தெளிவாக இல்லை. தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாகாணங்கள் நீரைத் தேக்குவதற்கு அல்லது வெள்ளத் தடுப்புக்காக அணைகள் கட்டிக்கொண்டன. “மனிதன் நீரில்லாமையால் தான் பாதிப்படைகிறான் , அதிக நீரினால் அல்ல” என்று ஒரு இடத்தில் குறிப்பிடும் அம்பேத்கர் தன்னுடைய இந்த எண்ணத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நீராதாரக் கொள்கையை வடிவமைத்தார்.

அம்பேத்கரின் நீராதாரக் கொள்கையானது ஆற்றுப் பள்ளத்தாக்கு வளர்ச்சி சார்ந்த பன்முகப் பயன்களை அளிக்கக்கூடிய நீர் மேலாண்மைத் திட்டங்கள், ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆணையங்கள் உருவாக்குதல், நீர் மேலாண்மை மற்றும் மின்சாரத் திட்டங்களை உருவாக்குவதற்கு வல்லுநர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவினை அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்தக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்காக அதுவரையில் தொழில்நுட்ப ஆலோசகர்களை மட்டுமே கொண்டிருந்த அமைச்சரவையில், முதன்முதலாக இரண்டு தொழில்நுட்பக் குழுக்களை அமைத்தார். 1944-ல் மத்திய தொழில்நுட்ப மின்சார வாரியத்தையும் 1945-ல் மத்திய நீர் வழி, பாசனம் மற்றும் நீர் வழிப் போக்குவரத்து ஆணையத்தையும் உருவாக்கினார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த இரண்டு ஆணையங்களும் அப்போது மத்திய – மாநில அரசுகளுக்குத் தொழில்நுட்ப ஆலேசனைகளை வழங்கின. அவை இன்று முறையே மத்திய மின்சார ஆணையமாகவும் மத்திய நீர் ஆணையமாகவும் உருமாறியிருக்கின்றன.

நதி நீர் மேலாண்மைத் திட்டங்கள்

நீரைச் சேமிக்கவும் வெள்ளத்தைத் தடுக்கவும் மட்டுமே ஒரு அணை கட்டுவது பயனற்றது என்று வலியுறுத்திய அம்பேத்கர், அந்தத் திட்டம் பாசனம், மின்சார உற்பத்தி மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்குப் பயனளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவ்வாறு அவர் முதலில் எடுத்துக்கொண்ட திட்டம் தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டம். பிகாரில் (தற்போது ஜார்கண்டில்) உற்பத்தியாகி வங்காளத்தில் ஹூக்ளி ஆற்றில் கலக்கும் இந்த நதி மழைக்காலங்களில் கடுமையான சேதங்களை விளைவித்ததால் ‘வங்காளத்தின் துக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த நதியைக் கட்டுக்குள் கொண்டு வர ஆங்கிலேயர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. பல தீர்வுகளை ஆழ்ந்து சிந்தித்த அம்பேத்கர், தாமோதர் திட்டத்தை அமெரிக்காவின் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம் போன்று பெரிய அளவிற்கு உருவாக்கினால் தான், அது பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்.

ஒரே வருடத்தில் முழு தொழில்நுட்பத் திட்டமும் தயாரிக்கப்பட்டது. பிறகு இரண்டே வருடங்களில், ஒவ்வொரு மாகாணமும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, மாகாணங்களுக்கிடையேயான அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, அரசியல் சட்ட சபையில் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையம் 1948-ல் உருவாக்கப்பட்டது. இன்றளவும் அது மிகப்பெரும் சாதனையாக விளங்குகிறது. இந்தியாவில் பன்முகப் பயன்களைக் கொண்ட முதல் நதி நீர்த் திட்டம் தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையமே. தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையத்தின் கீழ் இன்று 5 அணைகள், 5 அனல் மின் நிலையங்கள், 3 நீர் மின் நிலையங்கள் இருக்கின்றன. மொத்தம் 2760 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 7 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றன.

அதைத் தொடர்ந்து ஒரிசா அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மகாநதியில் ஹிராகுட் திட்டத்தையும், மத்திய பிரதேசத்தில் சோன் பள்ளத்தாக்கு திட்டத்தையும் உருவாக்கினார். ஹிராகுட்டில் மார்ச் 1946ல் அணைக்கு அடிக்கல் நாட்டினார். துரதிர்ஷ்டவசமாக 1946-ன் பிற்பகுதியில் அவர் பதவி விலக நேர்ந்தது. அதனால் இந்தத் திட்டங்களில் பல தொய்வடைந்தன.

மாநிலங்களுக்கிடையே நதிநீர் பங்கீடு

இந்திய அரசு சட்டம், 1935-ன் படி நீர் மேலாண்மை அதிகாரம் முற்றிலுமாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. நதிகள், மத்திய அரசின் அதிகாரத்தினுள் வரவேண்டும் என்று தொடர்ந்து வாதிட்டவர் அம்பேத்கர்.

பல்வேறு காரணங்களுக்காக ஒரு மாகாணம் தன் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் உருவாகும் நதியினை மற்ற மாகாணங்களுக்குப் பகிராமல் போகலாம் என்று அவர் கருதினார். சித்தார்த்தர் துறவறம் ஏற்று புத்தராக காரணமான ரோஹினி ஆறு பிரச்சனை அவர் கண் முன் விரிந்திருக்கலாம்.

இந்திய அரசியல் சட்டக் கூறு 262-ன் மூலம் நதி நீர்ப் பகிர்வு பிரச்சனைகளைத் தீர்க்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியதோடு நிற்காமல், நதி நீர் குறித்து மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தினார் அம்பேத்கர்.

மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளில் பொது நன்மைக்காக வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவருவதற்கு ஏழாவது அட்டவணையில் மத்திய அரசு பட்டியலில் பொருள் 74-ஐ புகுத்தினார். ஆனால் அரசியல் சட்டத்தின் இந்தக் கூறுகளை மத்திய அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

– அ.பூ.இராஜசேகரன், வழக்கறிஞர்,

தொடர்புக்கு: rajasekaranab@gmail.com

ஏப்ரல்.14: அம்பேத்கர் பிறந்த தினம்

நன்றி: தமிழ் இந்து

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

1 year ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago