IPL போட்டியை தடை செய் அரசியல் அமைப்புகள் போராட்டம்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானம், முதல் ஐபிஎல் போட்டிக்குத் தயாராகிறது. நாளை (ஏப்ரல்-10), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது என்றும், அப்படி நடைபெற்றால் பார்வையாளர்களாக உள்ளே நுழைந்து போரோடுவோம்’ என்றும் பல அரசியல் அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன. இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகமும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளன.
அரசியலுக்கு அப்பார்பட்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஒன்று கூட வேண்டும் என்று பல்வேறு அரசில் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா? காவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் – இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..?
சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..??
தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என்று G.V.பிரகாஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கட்டுப்பாடு
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாளை நடைபெறும் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் என்னென்ன கொண்டுவர வேண்டும், கொண்டுவரக் கூடாது என்ற பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. `இதில் மொபைல்போன் உள்பட எந்த எலெக்ட்ரானிக் உபகரணமும் கொண்டுவரக் கூடாது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
`செல்போன், கேமரா, வீடியோ கேமரா, பைனாகுலர், கண்ணாடி பாட்டில்கள், குளிர்பானம் மற்றும் மதுபானம் அடங்கிய பாட்டில்கள், கத்தி, வெடிபொருள்கள், பை, பெட்டிகள், தீப்பற்றக்கூடிய பொருள்கள், சிகரெட் லைட்டர் மற்றும் தீப்பெட்டிகள், காற்று ஒலிப்பான், புகைகுண்டு மற்றும் கொடிக்கம்புகள், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்கள் (பதிவுசெய்யப்பட்ட மருத்துவ அதிகாரி பரிந்துரைக்கப்பட்ட பொருள்கள் தவிர்த்து), அரங்கத்தின் வெளியே தயாரித்த உணவுப்பொருள்கள், செல்லபிராணிகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், சின்னங்கள் அல்லது இதர பொருள்கள், அரசியல், மதம் மற்றும் சாதி தொடர்பான கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதப்பட்ட விளம்பரங்கள் அல்லது உருவ பொம்மைகள் போன்ற பொருள்களை மைதானத்துக்குள் கொண்டுவரக் கூடாது’ என்கிறது கிரிக்கெட் வாரியம்.
ஆனால், `சோஷியல் மீடியா யுகத்தில் செல்போனுக்குத் தடையா?’ என ரசிகர்களிடையே கேள்விகள் எழுகின்றன. “இந்த அறிக்கை என்பது வழக்கமான அறிக்கைதான்!” என்கிறார்கள் சென்னை ரசிகர்கள். மேலும், “செல்போன் கொண்டுவரக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் செல்போன் கொண்டுவருபவர்களை இதுவரை தடுத்ததேயில்லை” என்கிறார்கள்.
நாளைய சென்னை போட்டிக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஐந்து கூடுதல் கமிஷனர்கள் தலைமையில், பாதுகாப்புப் பணிகள் கண்காணிக்கப்பட உள்ளன.
கறுப்புச் சட்டைக்கு தடையா?
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது கறுப்புச் சட்டை அணிந்துவந்தவர்களை மைதானத்துக்குள் நுழையவிடாமல் தடுத்தது சென்னை போலீஸ். இந்தமுறை பல அமைப்புகளும் கறுப்புச் சட்டை அணிந்துவருவோம் என்று வெளிப்படையாகவே சொல்லும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகியிடம் பேசினோம்… “கறுப்புச் சட்டை அணிந்து வருபவர்களை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் இதுவரை தடுத்ததேயில்லை. நாளைய போட்டிக்கும் நாங்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்தால் அனுமதியில்லை எனச் சொல்லவில்லை. ஆனால், போலீஸ் என்ன முடிவெடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்.
மைதானத்துக்குள் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது தெரிந்தால், சிலரது செயல்கள் தகாதவகையில் இருந்தால், பார்வையாளர்கள் உடனடியாக போலீஸிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வாரிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் செல்போன் அல்லது பார்வையாளர்கள் கொண்டுவரும் எந்தப் பொருள்களையும் போலீஸிடமோ அல்லது வேறு யாரிடமோ கொடுத்துவிட்டு உள்ளே போக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.