பட்டுக்கோட்டை செய்திகள்

மனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா… பட்டுக்கோட்டை.

protest in pattukkottai hospital
Written by admin

protest in pattukkottai hospital

பட்டுக்கோட்டை அதன் சுற்று பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், இருதய நோய் மாரடைப்பு மற்றும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது, அரசு மருத்துவர்கள் நோயாளிகளிடம் நீங்கள் “தஞ்சாவூருக்கு கொண்டு போங்க” என்று சொல்லிவிடுவார்கள், அதையும் மீறி அங்கே தங்க வேண்டுமானால் பெரிய மனிதர்கள் எவராவது சிபாரிசு செய்ய வேண்டும், ஒருவேளை உயிர்பிழைக்க வாய்ப்பிருப்பவர்கள் கட்டாயம் தஞ்சாவூருக்கு போய்தான் ஆக வேண்டும், அப்படியே 48km தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு சென்றாலும் பெரும்பாலோனோர் போகும் வழியிலேயே உயிரை பிரியும் கொடுமையும் அதிக அளவில் நடைபெறுகிறது.

பொதுவாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சிகிச்சை என்பது காய்ச்சலுக்கு மாத்திரை தருவது மட்டும் தான் என்ற நிலைமை தான் உள்ளது

pattukkottai hospital

இந்த நிலையை போக்க பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணை யில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை (17/02/2018) சனிக்கிழமை காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அறவழி போராட்டம் நடைபெற உள்ளது. இனி ஒரு உயிர் இழப்பு கூட நடைபெறக்கூடாது. எனவே அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது….

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட கடலோர மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கிய பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை, படிப்படியாக மக்களின் நம்பிக்கையை இழந்து, தீவிர சிகிச்சையை எதிர்நோக்கும் நோயாளியைப் போல கவலைக்கிடமாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

தற்போது, பல்வேறு கட்டிடங்களில் 202 படுக்கைகளுடன் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு, நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்களே வருகின்றனர்.

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த முத்துப்பேட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், சேதுபாவாத்திரம், திருவோணம், கட்டுமாவடி, மீமிசல், கோட்டைப்பட்டினம், கறம்பக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனர். சென்னை- கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை (ECR) இந்த வழியே செல்வதால், அதிகமான விபத்துகள் ஏற்படும் பகுதியாகவும் உள்ளது. அதிகமான மீன்பிடி துறைமுகங்களும் உள்ளதால், அதைச் சேர்ந்த மீனவர்களும் இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையிலேயே இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் உள்ளன. உள்நோயாளிகள் அனுமதிச் சீட்டு தருவதிலிருந்து, அறுவை சிகிச்சை வரை அனைத்துக்கும் கட்டணம் நிர்ணயித்து கட்டாய வசூல் செய்வதாகக் கூறப்படுகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவு…

நுழைவு வாயில் எதிரில் உள்ள கட்டிடத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, கட்டு போடுமிடம், ஊசி போடுமிடம், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்தும் மிகச்சிறிய அறைகளில் செயல்படுவதால், எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் பெரும்பாலும் அங்கு இல்லாததாலும், உரிய வசதிகள் இல்லாததாலும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை 55 கி.மீ. தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், போகும் வழியிலேயே பலர் உயிரிழந்துள்ளனர். அண்ணா வார்டு இடநெருக்கடியில் உள்ளது.

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு சிறிய அறையில் இருளடைந்து, கட்டில்கள், மெத்தைகள் சிதைந்து கிடக்கிறது. கொசுக்கடி, வியர்வையால் குழந்தைகள், தாய்மார்கள் அவதிப்படுகின்றனர். ஜவான் வார்டு யாரும் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. மற்ற வார்டுகளின் நிலைமையும் சுமாரான நிலையிலேயே உள்ளன. ‘சீமாங்க்’ மையம் மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. அதிலும், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்ற குறை உள்ளது. தீவிர இதய சிகிச்சைப் பிரிவும் தற்போது பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ளதால், இதய நோயாளிகளின் பாடு திண்டாட்டமாகியுள்ளது.

இந்த மருத்துவனைக்கு நீண்ட காலமாக நிரந்தர மயக்க மருந்து மருத்துவர்கள், அதற்கான கருவிகள் இல்லை. கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட கண் மருத்துவரும் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். இருக்கின்ற ஒன்றிரண்டு அறுவை சிகிச்சை மருத்துவர்களும் நீண்ட விடுப்பில் செல்வது போன்ற பல்வேறு காரணங்களால், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் இங்கு செய்யப்படுவதில்லை.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அவல நிலை

“மக்கள்தொகை, நோய்கள், அதிகரிக்கும் விபத்துகளுக்கு ஏற்ப இதனை மேம்படுத்தப்படாததாலும், மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம், அரசின் அலட்சியத்தாலும் சீரழிவின் உச்சத்தில் உள்ளது. இங்கிருந்த பொது அறுவை அரங்கம், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை அரங்கம் மூடப்பட்டுவிட்டது.

அதற்குப் பதிலாக, ‘சீமாங்க்’ பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கிலேயே, மற்ற அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகின்றன.

இதனால், தாய்மார் களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஜெனரேட்டர் முறையாக இயக்கப்படாததால், இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடும்போது, குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

குறைந்த திறன் கொண்ட எக்ஸ்ரே யூனிட்தான் உள்ளது. எக்ஸ்ரே, இசிஜி இரண்டுக்கும் ஒரே ஊழியர் மட்டுமே உள்ளதால், பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. குறைகளைக் களைந்து, போதிய நிரந்தர மயக்க மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், எம்டி மருத்துவர்கள், பணியாளர்களை நியமித்து, நவீன கருவிகளை அமைத்து உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை இங்கேயே செய்ய வேண்டும்.

உடனடியாக மாநில அரசு இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்” என்பதே இங்கு உள்ள மக்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.

“மனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா…”

 

About the author

admin

Leave a Comment