பட்டுக்கோட்டை செய்திகள்

பனைவிதை ஊன்றி, நீர் ஆதாரங்களை காக்கும் பட்டுக்கோட்டை இளைஞர்கள்.

palm tree uses

‘தென்னையை வெச்சவன் தின்னுட்டுச் சாவான்; பனையை வெச்சவன் பாத்துட்டுச் சாவான்’னு பழமொழி சொல்வாங்க. பனை பலன் தர அத்தனை காலம் ஆகுங்கிறதால அப்படிச் சொன்னாங்க. பனைமரம் மனுஷங்களுக்கு மட்டும் பயன் தரக்கூடியதல்ல. எறும்பு, பூச்சிகள், வண்டுகள், ஓணான், மரப்பல்லி, ஆந்தை, வெளவால், அணில், கிளி, குருவினு அனைத்து உயிர்களுக்கும் வாழ்விடமாக இருக்கிறது. இம்மரத்தின் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே பலன் தருபவை. அதனால்தான் இம்மரத்தை ‘பூலோகத்தின் கற்பகத்தரு’ என்கிறார்கள்.  ஒரு பனை அழிஞ்சா ஒரு தலைமுறையே அழியுறதுக்குச் சமம். இத்தகைய சிறப்புமிக்க பனைமரங்கள் சில ஆண்டுகளாக மிக வேகமாக அழிக்கப்பட்டு வருவதுதான் வேதனையான விஷயம்.

பட்டுக்கோட்டை இளைஞர்கள்.

தற்போது சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் எனப் பல தரப்பினரால் இம்மரத்தின் விதைகள் விதைக்கப்பட்டு வருவது சற்று ஆறுதலாக இருக்கிறது. பனையை வளர்க்க இளைய தலைமுறையினர் எடுத்துவரும் முயற்சி வரவேற்கத்தக்கது

The youth of Pattukkottai

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பெரிய ஏரிக்கரையில் 3000 பனைவிதை ஊன்றிய இளைஞர்கள்.. மண் அரிப்பை தடுத்து நீர் ஆதாரங்களை காக்கும் உன்னத பணியை செய்துவருகின்றனர். இவ்வாறு பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் பனைவிதை ஊன்றி வருகின்றனர்.

பனை விதை மட்டுமின்றி தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மரக்கன்றுகள் அமைத்து வேலியும் வைத்துள்ளார்கள்.

vithai

பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பு சார்பில், ஆலமரம், அரச மரம், வேப்பமரம், பனை மரம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த மரவிதைகள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 111 விதை பந்தினை உருட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் வீசியேறிந்து பெரும் இயற்கை புரட்சியினை ஏற்படுத்தியுள்ளனர்

தமிழர் வாழ்வின் அங்கம்!

“தமிழக வரலாற்றில் தொடர்ச்சியான எழுத்துப்பதிவு கொண்ட மரம் பனை. தமிழின் தொன்மைக்குச் சான்றான கி.மு காலத்திய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் (தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள்); இலக்கண நூலான தொல்காப்பியம்; சங்க இலக்கிய வகைப்பாட்டில் அடங்கும் ‘எட்டுத்தொகை’ மற்றும் ‘பத்துப்பாட்டு’ நூல்கள் ஆகியவற்றில் பனைமரம் குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. தமிழரின் பெருமிதத்துக்குரிய இலக்கிய, இலக்கண நூல்கள் அனைத்துமே பனை ஓலையில்தான் எழுதப்பட்டு வந்துள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு என்பவற்றுள் நெருங்கிய தொடர்புடையதாக அமையும் சிறப்பு, சில வகை மரங்களுக்கே உண்டு. இத்தகைய சிறப்புடைய மரமாகத் தமிழரின் சமூக வாழ்வில் இடம்பெற்ற மரம் பனை. பனைமரத்தை மையமாகக்கொண்ட பொருளாதாரம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. அதனால்தான், சோழர் காலத்தில் ஊரின் எல்லையில் பனையும் தென்னையும் வளர்ப்பதற்கான உரிமையைச் சோழ மன்னர்கள் வழங்கியுள்ளனர்.

வறட்சியைத் தாங்கி வளரும் பனை!

வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் பனையும் ஒன்று. நீர்வளம் அதிகமாக உள்ள பகுதியில் வளரும் பனையில் பதநீரும் நுங்கும் கூடுதலாக இருக்கும். ஆனால், சுவை குன்றியிருக்கும். அதேபோல மண் வகைகளைப் பொறுத்தும் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு ஆகியவற்றின் சுவை மாறுபடும். கார, அமிலத் தன்மையில்லாத செம்மண் நிலங்களில் வளரும் பனைமரத்தின் பதநீர், நுங்கு, கிழங்கு ஆகியவற்றில் சுவை இருக்காது என்று சொல்லப்படுகிறது. பொதுவாகப் பனை அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடியது. கடற்கரை ஓரத்தில்கூட வளரும் தன்மையுடையது.

palm tree uses

இந்தியாவில் உள்ள மொத்தப் பனைமரங்களில் 50 சதவிகித மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பனை மரங்களில் 50 சதவிகித மரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்றன. பனையில் பல வகைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் வளரும் பனை ‘பால்மே’ (Palmae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் ‘போரசஸ் பிலிபெல்லிஃபெர்’ (Borassus Flabellifer). பனை அதிகபட்சமாக 100 அடி உயரம் வரை வளரும். இது 120 ஆண்டுகள் வரை வாழும் தன்மையுடையது.

மண்ணரிப்பைத் தடுக்கும் பனை!

கிராமங்களிலுள்ள குளங்களைச் சுற்றிப் பனைமரங்களை நட்டு வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அது குளக்கரையைப் பலப்படுத்துவதற்காக நம் முன்னோர் கையாண்ட முறை. பனைமரத்தின் சல்லிவேர்கள் பரவலாக ஊடுருவிச் சென்று மண்ணை இறுகப் பற்றிக்கொள்வதால் மண் அரிப்பு ஏற்படுவதில்லை. இதனால், கரை பலப்படுகிறது. இப்படிக் கரைகளில் பனையை விதைக்கும்போது மரத்துக்கு மரம் பத்து அடி இடைவெளி இருக்குமாறு விதைத்திருக்கிறார்கள். அதனால்தான், ‘பனைக்குப் பத்தடி’ என்ற சொலவடை உருவாகியிருக்கிறது.

பனை வறட்சியைத் தாங்கி வளரும். தொடர்ந்து பல ஆண்டுகள் மழை இல்லாமல் போகும் சூழ்நிலையில், பனைமரங்கள் பட்டுப்போகத் தொடங்கினால், ‘பனைமரமே பட்டுப்போச்சு’ எனச் சொல்வார்கள். பனை பட்டுப்போய்விட்டால் கடும் வறட்சி, பஞ்சம் நிலவுகிறது என வரையறுத்துக் கொண்டனர் நம் முன்னோர்.

பனை விதை விதைக்கும் முறை:

panai vithai

“பனை சீசன் கார்த்திகை மாசத்துல ஆரம்பிச்சு வைகாசி மாசம் வரை இருக்கும். இந்த மாசங்கள்ல நுங்குகளை வெட்டாமவிட்டால், மரத்துலயே பழுத்துடும். பழுத்த பனம்பழங்களைக் குலையோடு வெட்டி, கீழே உதிர்ந்துறாம கயிறு கட்டி இறக்கணும். அப்படியே மேலே இருந்து கீழே விழுந்தால், அதிர்வால விதைகள் சேதமாக வாய்ப்புண்டு.

குலையில் இருக்கிற சில பழங்கள் சரியாகப் பழுக்காம இருக்கும். அதனால, பறிச்ச பனம்பழங்கள் எல்லாத்தையும் ஓர் இடத்துல குவிச்சுவெச்சு சணல் சாக்குப்போட்டு மூடி வெச்சா சீராகப் பழுத்துடும். அதுக்கப்புறம் பனம்பழங்களைப் பிதுக்கிக் கொட்டைகளைத் தனியா எடுக்கணும். ஒவ்வொரு பனம்பழத்துலயும் ஒரு கொட்டையில் இருந்து மூணு கொட்டைகள் வரை இருக்கும். நீளமான கொட்டை சீக்கிரம் முளைச்சு வரும். அதே மாதிரி குட்டையான மரத்திலிருந்து கிடைக்கிற பனங்கொட்டைதான் நல்லது. ஏன்னா, குட்டை மரத்துலதான் அதிகப் பதநீர் கிடைக்கும்.

பிதுக்கி எடுத்த கொட்டைகளைப் பத்து நாள்கள் வெயில்ல உலர வெச்சு… சூம்பின கொட்டைகள், வண்டு துளைத்த கொட்டைகளைக் கழிச்சுட்டுத் தரமான கொட்டைகளைச் சேகரிச்சுக்கணும். பத்தடி இடைவெளியில் ஓர் அடி சதுரம், ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுத்துக் கொட்டையின் கண் பாகம் கீழ் நோக்கி இருக்கிற மாதிரி விதைக்கணும். கொஞ்சம் எரு போட்டு விதைச்சா முளைப்பு நல்லா இருக்கும்.

விதை ஊணுனதிலிருந்து நாலு மாசம் கழிச்சு, கிழங்கு முளைச்சு வரும். அடுத்து வேர் உருவாகும். நாலாவது மாசத்துல நிலத்துக்குமேல இரண்டு குருத்து ஓலை தென்படும். இதுக்கு ‘பீலி’னு பெயர். ஒரு வருஷம் கழிச்சு பீலிக்கு நடுவுல இன்னொரு பீலி வளரும். ரெண்டு வருஷம் வரை பீலிப் பருவம்.

அதுக்கடுத்து வடலிக்கன்றுப் பருவம். பனை வளர வளரப் பக்கவாட்டுல கருக்குமட்டையுடன் வெளியே நீட்டிக்கிட்டு இருக்கிற ஓலைகளை அவ்வப்போது வெட்டிடணும். பனையைச் சுத்தி வளர்ற களைகள், காட்டுக்கொடிகளையும் பிடுங்கிடணும். இப்படி முறையாகப் பராமரிச்சாத்தான் உரிய காலத்துல பலன் கிடைக்கும்”

About the author

admin

Leave a Comment