தமிழகத்தில் வியாழக்கிழமை டெங்கு கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
டெங்கு கொசு ஒழிப்பு தினம்
கூட்டத்துக்கு பிறகு விஜயபாஸ்கர், ராதா கிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த மாதம் முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு கொசு ஒழிப்பு தினமாக கடைப் பிடிக்கப்படும். தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மருத்துவமனை உட்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டம் நாளை (இன்று) தொடங்கப்படும். 29 வகையான காய்ச்சல் இருக்கிறது. பரிசோதனை மூலம் என்ன காய்ச்சல் என்று கண்டு பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை நகராட்சி
இதன் அடிப்படையில் பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு கொசு ஒழிப்பு தினமாக கடைபிடுத்து டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவதற்கு பிரச்சாரங்களையும் செய்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்…
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழப்புகள் நேர்ந்து வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
- 2 நாட்கள் இடைவெளியில் விட்டு விட்டு காய்ச்சல் வருவது.
- காய்ச்சலில் போது வாய்ப்பகுதியை சுற்றிலும் நிறம் மாறுவது.
- கண்கள் சிவந்து காணப்படுவது மற்றும் முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது.
- காய்ச்சலுடன் மூச்சு திணறல் ஏற்படுவது.
- குளிர், தலைவலி, கண்களை நகர்த்தும் போது வலி, கீழ் முதுகு பகுதியில் வலி
- இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம் மற்றும் கால்களில் வீக்கம்.
- கால்களிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியுடன் காய்ச்சல்
தடுக்கும் வழிமுறைகள்:
- பகலில் கடிக்கும் ஏடிஸ் ஈஜிப்ட் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
- சுத்தமான தண்ணீரில் மட்டுமே டெங்குவை பரப்பும் ஏடிஸ் ஈஜிப்ட் கொசுக்கள் உருவாகின்றன.
- வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து?
டெங்கு காய்ச்சல் வந்தால், புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி 10 மில்லி வீதம் தினமும் 4 முறை குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்கள் குடித்தால் டெங்கு காய்ச்சல் தணிந்துவிடும். அதன் பிறகும் மேலும் 2 நாட்கள் அதை குடிக்க வேண்டும்.
புதிதாக பறித்த மலைவேம்பு இலையுடன் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி 10 மில்லி வீதம் தினமும் 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும். 5 நாட்களில் காய்ச்சல் தணிந்த பிறகும் மேலும் 2 நாட்கள் அதை குடிக்க வேண்டும்.
10 கிராம் நிலவேம்பு சூரணத்தை எடுத்து 100 மில்லி நீருடன் கலந்து 50 மில்லியாக வற்றும்வரை கொதிக்க வைத்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிக்க வேண்டும். 5 நாட்களில் காய்ச்சல் தணிந்த பிறகும் மேலும் 2 நாட்கள் அதை குடிக்க வேண்டும்.
நிலவேம்பு குடிநீர், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
விழிப்புணர்வு:
- டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.
- போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள கூடாது.