You Are Here: Home » செய்திகள் » டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue

டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue

dengue preventing methods

மழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய். இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு!

ஒரு பக்கம், சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்திவருகிறது. இருந்தும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை.

“டெங்கு” பற்றிய பயமும் உயிரிழப்பும் முழுவதுமாகக் குறைவதற்கு அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். சுகாதாரமற்றச் சூழல்தான் டெங்கு பரவுவதற்கான அடிப்படை என்பதையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும். டெங்கு ஒழிப்புக்கான அரசின் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்புத் தர வேண்டும். அப்போதுதான் டெங்குவிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

டெங்குக் காய்ச்சல் (Dengue Fever)

‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.

எப்படிப் பரவும்?

dengue mosquito

கொசுவால் மட்டுமே பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.

எப்படிப் பரவாது?

இது தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை.

ஏடிஸ் கொசு ( Aedes Aegypti)

dengue mosquito

ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும். இதனால் கொசுவின் வயிற்றில் முட்டைகள் வளர்ச்சியடையும். மூன்றாவது நாளில், நீரில் முட்டையிடும். ஆறாவது நாளில் லார்வா என்ற நிலையை அடையும். 11-வது நாளில் லார்வாவில் இருந்து பூச்சிநிலையை அடையும். 13-வது நாளில் முழுவையான கொசுவாக வளர்ச்சியடையும். இப்படி முதிர்ச்சியடையும் கொசு, வாழும் சூழலுக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும்.

 

How-to-prevent-dengue-fever

பொதுவாக, கொசுக்கள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும் என்று அறிந்திருப்போம். ஆனால், டெங்குக் கொசுக்களோ அசுத்தமற்ற நீர்நிலைகளிலும் வளரக்கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.

யாருக்கு ஆபத்து அதிகம்?

குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.

அறிகுறிகள்…

dengue-symptoms

திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு எப்போது?

பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

என்னென்ன பரிசோதனைகள்?

ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று, என்.எஸ் 1 ஆன்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்குக் காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, அதே நாளில் ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.

என்ன சிகிச்சை?

டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

நோயுற்ற காலத்தில்…

காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தடுக்க என்ன வழி?

டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால், சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றும் வரை காத்திராமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள். குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

Mosquito Net

வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கொசு விரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசம், சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்’’

11-ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஆயுர்வேத புத்தகத்திலும் இது பற்றி சொல்லப்படவில்லை. அதன் பிறகு `தண்டக ஜுரம்’ என்ற ஒன்றைச் சொல்கிறார்கள். இந்த ஜுரத்துக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகளும் டெங்குவுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும், ஆயுர்வேதம் பரவக்கூடியது, பரவாதது என இரண்டு வகை ஜுரங்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் டெங்கு, விஷக் கிருமிகளால் பரவக்கூடிய நோய்களின் கீழ் வருகிறது

சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துகளில்,நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனைப் பிரிவில் வாங்கிப் பயன்படுத்தலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து, டெங்கு வைரஸை அழிக்கும்.

அதேபோல, ஆயுர்வேதத்தில் காய்ச்சல் அல்லது ஒரு நோய் வந்த பிறகு ஒரு மாத்திரையே எடுத்துக்கொள்வது சிகிச்சையாக கருதப்படுவதில்லை. அந்த நோய்க்கான காரணியை அறிந்து அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதும் நம்மை காத்துக்கொள்வதுமே சிறந்த வழி என்கிறது ஆயுர்வேதம். இதை, `நிதான பரிவர்த்தனமேவ சிகிச்சா’ என்கிறார்கள். நிதானம் என்றால் நோய்க்காரணியை நிதானித்து அறிவது. பரிவர்த்தனம் என்றால் எப்படி நோய் பரவுகிறது என்பதற்கான காரணங்களைக் கண்டறிதல். எனவே, டெங்கு பரவக் காரணமாகும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதுதான் சிறந்த வழி.

வேறு சில வழிமுறைகள்…

`வாசா குடுஜியாதி கஷாயம்’ – ரத்தத் தட்டுகளை அதிகரிக்கும். காய்ச்சலை குறைக்கும். உலகத்திலே ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் சிறந்த மருந்து ஆடாதொடா. இதுதான் இந்த கஷாயத்தின் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

dengue preventing

`சுதர்சன சூரணம்’ – இந்த மருந்தின் முக்கிய மூலப்பொருள் நிலவேம்பு. இது, மாத்திரை வடிவிலும் கிடைக்கும். நாட்டு மருத்துக்கடைகளில் கிடைக்கும். இதை சளி, இருமல் தொடங்கி எந்தக் காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே நிலவேம்பு கஷாயம் தயாரிக்கும் முறை.

Nilavembu Kudineer

வீட்டிலேயே நிலவேம்பு கஷாயம் தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி நிலவேம்புடன், சிறிதளவு கோதைக் கிழங்கு, பர்ப்பாடகம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், பேய்ப்புடல், மிளகு, சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அதற்கு எட்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி, பாதியாகும் வரை கொதிக்கவைத்துக் குடிக்கலாம். இதில் பெரியவர்கள் 30 மி.லி-யும் (ஒரு அவுன்ஸ்), சிறுவர்கள் 10-15 மி.லி-யும், குழந்தைகள் 10 மி.லி-யும் கொடுக்கலாம். இதில் உள்ள அனைத்தும் நாட்டு மருத்துக் கடைகளிலேயே கிடைக்கும்.

Comments (1)

Leave a Comment

© 2017 Copyright by Pattukkottai Info. All rights reserved. Developed by The Web Culture

Scroll to top