நாம் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும் அங்கு காணும் இடங்கள் நம் நினைவில் நீங்காமல் இருப்பது போல… அந்த ஊரில் உண்ணும் உணவின் சுவையும் எண்ணத்தை விட்டு மறையாது. பாடல்கள் மூலம் காதுக்கும் மனதுக்கும் விருந்தளித்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். உணவு மூலம் நாவுக்கு விருந்தளித்து வருகிறது, பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் (Pattukottai Kamatchi Mess).
பட்டுக்கோட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள இந்த மெஸ், சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அசைவப் பிரியர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இப்போது, புதிய கிளை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் வழியாக பயணிக்கும் பகுதிவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளில் பலரும் இந்த மெஸ்ஸில் கை நனைப்பதை வாடிக்கையாகவே வைத் துள்ளனர்.
ஹோட்டல் ரிவியூக்காக காமாட்சி மெஸ்ஸுக்கு விசிட் அடித்தோம். வாசலில் பெண்கள் வரவேற்றனர். உள்ளே, மிதமான ஏ.சி குளிரில், மெல்லிய இசை மனதை வரு டியது. ஊதுபத்தியும் தன் பங்குக்கு வாசனை பரப்பி கொண்டிருந்தது. மதியம் மட்டுமே இயங்கும் இந்த மெஸ்ஸில் சாப்பாடு மட்டுமே கிடைக்கும்.
Pattukottai Kamatchi Mess Menu
சிக்கன் கிரேவி, நண்டு கிரேவி, இறால் கிரேவி, காடை கிரேவி என விதவிதமான கிரேவிகளைக் கொடுத்து அசத்துகிறார்கள். மீன், மட்டன், எலும்பு, சிக்கன், கருவாட்டுக் குழம்பு வகைகளும் உண்டு. மீன் வறுவல், இறால், சுக்கா, நண்டு வறுவல், காடை, மட்டன் சுக்கா, தலைக்கறி சாப்ஸ், கறி கோலா, மூளை பெப்பர், ஈரல் மசால் என விதவிதமாக சைட் டிஷ்களும் உண்டு. நாம் ஆர்டர் செய்தது, இறால் சுக்கா மற்றும் நண்டு வறுவல். செய்தித்தாளை விரித்து அதன் மேல்தான் இலையைப் போடுகிறார்கள். அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் மண் குடுவையில் தயிரையும், சின்ன வெங்காயத்தையும் வைப்பது இந்த மெஸ்ஸின் சிறப்பு.
பெண்களே இங்கு உணவு பரிமாறுவதால், வீட்டில் சாப்பிடும் உணர்வு தானாகவே வந்து விடுகிறது. கூட்டு, பொரியல் வைத்தவுடன் சாதம் வருகிறது. பிறகு ஒவ்வொரு கிரேவி மற்றும் குழம்பாகக் கொண்டு வருகிறார்கள். எதையாவது ‘வேண்டாம்’ என்று சொன்னால்… ‘கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுப் பாருங்க’ எனக் கனிவு காட்டுகிறார்கள். இறால் சுக்காவும், நண்டு வறுவலும் வந்துவிட, அதன் வாசனையே நம் நாவில் எச்சில் ஊற வைத்தது. சாப்பிட்டு முடித்தவுடன் செரிமானத்துக்காக கடலை மிட்டாய் தருகிறார்கள்.
இங்கு சமையலர்கள் அனைவரும் பெண்கள். தவிர, விறகு அடுப்பு மூலமாக சமைத்து, மண் சட்டி, மண் குடுவையில் வைத்துப் பரிமாறுவதால் சுவை மேலும் கூடுகிறது.
பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் கிளைகள்
முதலில் பட்டுக்கோட்டையில் துவங்கப்பட்ட பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் பின்பு நல்ல வளர்ச்சியும் மக்களின் ஆதரவும் பெற்று, தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் தங்களது கிளைகளை தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
காமாட்சி மெஸ்ஸின் உரிமையாளர் ரஜினிகாந்திடம் பேசினோம். ‘‘எங்க தாத்தா சிங்கப்பூர்ல இடியாப்பக் கடை வைத்திருந்தார். அந்தக் கடை ரொம்ப பிரபலம். எனக்கும் சமையல் மேல ஈடுபாடு அதிகம். என்னைச் சந்திக்கிற நண்பர்கள் நிறைய பேர், ‘பட்டுக்கோட்டையில சரியான அசைவ ஹோட்டல் இல்லையே’னு புலம்பினதைப் பார்த்துத்தான் ஹோட்டல் ஆரம்பிக்கிற எண்ணம் வந்தது. சுத்தம் சுகாதாரத்தோட நல்ல ஹோட்டலா நடத்தணும்னு முடிவெடுத்து ஆரம்பிச்சோம். சமையல்ல இருந்து அத்தனை வேலைகளையும் குடும்பத்து ஆட்கள்தான் செய்றோம். மீன், நண்டு, இறால் எல்லாம் அதிராம்பட்டினம் கடற்கரையில நேரடியா போய் பாத்து வாங்குவேன்.
பழையதை எப்பவும் பயன்படுத்துறதேயில்லை. கலப்படமும் இல்லாமல் செய்வதும், பெண்களே சமைப்பதும் சுவையைக் கூட்டுது. வழக்கமா கொஞ்சம் போல மட்டுமே சாப்பிடுவர்கள்கூட எங்க மெஸ்ஸுக்கு வந்தா நிறைய சாப்பிட்டுடுவாங்க. வாடிக்கையாளர்களுக்கு வயிறு நிறையுறதோட மனசும் நிறையணும்னு குறிக்கோள் வெச்சிருக் குறதுதான், எங்க வெற்றிக்குக் காரணம்’’ என்று பெருமிதமாகச் சொன்னார், ரஜினிகாந்த்.
நல்ல பசியோட போனால் செமயா விளையாடலாம். இருந்தாலும் கொஞ்சம் காஸ்ட்டிலியா தான் இருக்கு என்று நினைக்க தோன்றும்.
நன்றி: விகடன்