செய்திகள்

‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!

s ramakrishnan
Written by admin

2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ( Sahitya Akademi Award ) இன்று (05.12.2018) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாதஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றியது இந்த நாவல். சாகித்ய அகாடமி விருதுதான் மத்திய அரசால் இந்திய மொழி இலக்கியங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.

s ramakrishnan

சாகித்ய அகாடமி விருது ( Sahitya Akademi Award )

இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து ‘சாகித்ய அகாடமி’ சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் நூலுக்குரிய இந்த ஆண்டுக்கான விருது யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்க்கரசி. மனைவி சந்திர பிரபா. குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ். புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர். ஒருபுறம் தீவிர திராவிடக் கொள்கையிலும் மறுபுறம் தீவிர சைவ சித்தாந்தப் பின்புலத்தின் அடிப்படையிலும் வளர்ந்தவர். புராணக் கதைகளை மட்டுமல்ல; அதில் வரும் இடங்களுக்கும் பயணம் செய்து பார்ப்பதில் தீவிர ஆர்வம் உடையவர். அப்படி மகாபாரதம் நடந்த இடங்களுக்குப் பயணம் செய்தவர். சிலப்பதிகாரத்தை மையமிட்டு கண்ணகி சென்ற இடங்களைத் தேடிப் பயணம் செய்துவருபவர்.

s ramakrishnan

இவரது முதல் கதையான ‘பழைய தண்டவாளம்’ கணையாழி சிற்றிதழில் வெளியானது. நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர். கடந்த 25 ஆண்டுக்காலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள்கொண்ட தேசாந்திரி. உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில், நிமித்தம், சஞ்சாரம், இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், டச்சு, கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘அட்சரம்’ என்ற இலக்கிய இதழை சில காலம் நடத்தி வந்தார். சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் பாபா, விஷால் நடித்த சண்டக்கோழி, மாதவன் நடித்த ரன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

சர்வதேச திரைப்படங்கள் மீதும், உலக இலக்கியங்கள் மீதும் தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்து வரும் எஸ்.ரா கரிசல் பூமியில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை வைத்து ‘சஞ்சாரம்’ நாவலை எழுதினார். இந்நாவலை எழுதியதற்காக எஸ்.ராவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பட்டுக்கோட்டை இன்போ-வின் வாழ்த்துக்களும் வணக்கங்களும்…

உங்கள் வாழ்த்துக்களை கமெண்டில் கீழே உள்ள பதிவு செய்க

About the author

admin

Leave a Comment