Tamilnadu Farmer: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரத்தநாடு பகுதியில் கருப்புகொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி சமவெளி பகுதி பாதுகாப்பு போராட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரத்தநாட்டில் காவிரி சமவெளி பகுதி பாதுகாப்பு போராட்டக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் உழவு செய்து பயன்படுத்திய விளைநிலத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய வேளாண் மண்டலமாக அறிவிக்க சொன்னால் அதை பெட்ரோல் மற்றும் கெமிக்கல் மண்டலமாக அறிவித்து பாலைவனமாக்க தமிழக அரசு துடிப்பதை கண்டிப்பது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
வறட்சி மாநிலமாக அறிவித்த பிறகும் விவசாய தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை. மகளிர் குழுக்கள், தொண்டு நிறுவனம் மற்றும் வங்கியில் கடன் தொந்தரவு செய்யப்பட்டு வசூல் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு சென்றால் மத்திய அரசிடம் அனைத்தையும் அடகு வைக்க வேண்டும். இதன்பின்னர் தமிழக அரசுக்கு வேலை இல்லை. நாளை (26ம் தேதி) வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி சமவெளி பகுதி பாதுகாப்பு போராட்டக்குழு சார்பில் ஒரத்தநாட்டில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரத்தநாடு தொகுதி செயலாளர் ராஜலிங்கம், மதிமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், மக்கள் விடுதலை மாணவர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்ஷோரி மற்றும் பலர் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டை: திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க ஒன்றியக்குழு கூட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்காததால் பட்டுக்கோட்டைக்கு நாளை வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவோணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அருகே கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ சுரேஷ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒரத்தநாடு தாசில்தார் ஜானகிராமன், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, காப்பீட்டு கழக அதிகாரிகள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பயிர் இழப்பீட்டுத்தொகை நவம்பர் முதல் வாரத்துக்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.