செய்திகள்

ஆம்பலாபட்டில் தலித்துகள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல்; ஆம் இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?

புத்தாண்டு தொடக்கத்தில் தலித்துகள் மீது சாதி ஆதிக்கத்தினர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாதி

2018 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை உலகமெங்கும் உள்ள மக்கள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு கிராமம் குடிக்காடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் ஞாயிறு இரவு கிராமத்தில் மைக்செட், மின்விளக்கு அலங்காரம் அமைத்து, புத்தாண்டை வரவேற்கும் வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதை பொறுத்துக் கொள்ளாத அருகில் உள்ள ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த சாதி ஆதிக்க இளைஞர்கள் 100 க்கும் மேற்பட்டோர் டெம்போ சரக்கு மினி வேனில் தடிக்கம்பு, இரும்பு கம்பி, ராடு, வேல் கம்பு, அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட கொடிய ஆயுதங்களோடு தலித் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கண்மூடித்தனமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் உடைத்து தூக்கி வீசி எறிந்து சென்றுள்ளனர். மேலும் குடிதண்ணீர் பைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.

ambalapattu

சாதி ஆதிக்க சக்தியினரின் தாக்குதல் மற்றும் வெறிக்கூச்சலில் பயந்து போன தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், குடிசை வீடுகளில் வசித்தோர், கைக்குழந்தைகளுடன் கொல்லைப்புறமாக தப்பித்து வயல்வெளியில், தென்னந்தோப்புகளில் ஓடி மறைந்து தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர்.

new year

தாக்குதலை தட்டிக் கேட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த திருமேனி மகன் சீரங்கம்(56) கை, கால்களில் காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், செல்வம் மகன் ராஜ்குமார் (35) தலை, கை, கால், இடுப்பில் பலத்த காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலித் இளைஞர்கள் எதிர் தாக்குதல் நடத்தாமல் உயிரைக் காப்பாற்றி கொள்ள ஓடி ஒளிந்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக இப்பகுதி பெண்கள் அச்சம் விலகாத முகங்களோடு தெரிவித்தனர்.

dalit house

அச்சத்தில் தலித் இன மக்கள் ஓடி ஒளிந்த நிலையில் சாதி ஆதிக்கத்தினர், கிராமத்திற்கு வரும் மின் இணைப்பை துண்டித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் 8 மோட்டார் சைக்கிள்கள், தொலைக்காட்சி பெட்டி, பீரோ, வீட்டு சுவர் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஓட்டு, கூரை வீடுகள் தாக்கி உடைக்கப்பட்டுள்ளன. ஞாயிறன்று இரவு நடைபெற்ற இத்தாக்குதலின் பீதி குறையாத நிலையில் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர்.

casteism

இச்சம்பவம் குறித்து ஞாயிறன்று இரவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்களை ஏற்ற வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஊருக்குள் வரவிடாமல் சில குண்டர்கள் தடுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் வேறு பாதையில் ஆம்புலன்ஸை வரவழைத்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சாலை மறியல்

இந்நிலையில் விடிந்ததும் இன்று காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், “குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தை பார்வையிட வேண்டும்” என வலியுறுத்தி தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் ஆம்பலாபட்டு, கரம்பயம் மில் முக்கம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காலை 10 மணி முதல் 1 மணி வரை போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் மாற்றுச்சாலையில் அனுப்பி வைக்கப்பட்டன.சாலை மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் சுரேஷ் குமார், நிர்வாகிகள் பாஸ்கர், கோவிந்தராசு, மோகன்தாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முத்து.உத்திராபதி, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ், சீனி.முருகையன், பாஸ்கர், ஜெய்சங்கர், கோசிமின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோட்டை அரசமாணிக்கம், மோட்ச குணவழகன், வெற்றிச்செல்வன், சக்கரவர்த்தி, சிவாஜி, ஆம்பல் சரவணன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் சதாசிவக்குமார் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

ambalapattu protest

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி செந்தாமரைக்கண்ணன், ஒரத்தநாடு வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, வருவாய்துறை அலுவலர்கள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். “குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ambalapattu protest

பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர், அனைத்துக் கட்சியினர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். வருவாய்த்துறை சார்பில் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுப்பு செய்தனர்.

கூடுதல் கண்காணிப்பாளர் தகவல்

கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குற்றவாளிகள் இருவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் போதிய காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என்றார்.

தீ.ஒ.மு – சிபிஎம் ஆறுதல்

பாதிக்கப்பட்ட மக்களை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், நிர்வாகிகள் சாமி.நடராஜன், இராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் சின்னை.பாண்டியன், கே.அபிமன்னன் மற்றும் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சிபிஎம் கோரிக்கை

இச்சம்பவம் குறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறுகையில், “முற்போக்கு கிராமமான ஆம்பலாபட்டு கிராமத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வழக்கமாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் இருதரப்பார் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்யும். இருதரப்பு இடையே ஏற்பட்ட தாக்குதல் என்றல்லாமல், எதிர் தாக்குதல் நடத்தாமல் அப்பாவிகளாக உயிரைக் காப்பாற்ற ஓடி ஒளிந்த, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது வழக்குப் பதியாமல், தாக்குதல் நடத்திய ஆதிக்க வெறியர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். போதிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்” என்றார்.
தலித் மக்கள் மீதான கொடும் தாக்குதல் இப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தலித் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பாதிக்கப்பட்ட வீடு

சீரங்கன் வீடு மற்றும் 4 பைக்குகள், குணசேகரன் வீடு மற்றும் 1 பைக், ரெங்கசாமி வீடு, ராமச்சந்திரன் வீடு, டிவி, பீரோ, சரவணன் வீடு, பன்னீர்செல்வம் வீடு, பைக், சைக்கிள், கண்ணன் வீடு, பைக், டிஷ் ஆண்டெனா, இளங்கோவன் வீடு, கவிதாஸ் வீடு, கதவு உடைப்பு மற்றும் சிலரது வீடுகள்.

மேலும் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதோடு, கால்நடைகளை அவிழ்த்து விரட்டி அடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மகேஸ்வரி

இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது மகேஸ்வரி என்பவர் தன் இரண்டு கைக்குழந்தைகளுடன் கொல்லைப்புறமாக ஓடி தப்பி உயிர் பிழைத்துள்ளார். அவர் மிரட்சி விலகாத கண்களுடன் நம்மிடம் பேசுகையில், “எனது கணவர் ராமச்சந்திரன் வெளியே சென்று விட்டதால் இரண்டு கைக் குழந்தைகளுடன் எனது குடிசை வீட்டில் தனியாக இருந்தேன். நான்கைந்து பேர் ஆபாசமாகவும், சாதிய வன்மத்துடனும் பேசி ஆயுதங்களால் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து டிவி, பீரோவை அடித்து உடைத்தனர். என்னவென்றே தெரியாத சூழலில் பயத்துடன் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடி அருகில் உள்ள தோப்பில் புகுந்து உயிர் பிழைத்தேன்” என்றார்.

தாக்குதலில் ஈடுபட்டதாக கிராமத்தினர் குறிப்பிட்ட நபர்கள்

கண்ணுகுடி சுகுமாரன், விஜய், அஸ்வின், விக்னேஷ், சுகோ, ராஜ்குமார், கணேஷ், அஜித், சுகுமார் உள்ளிட்ட நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தலித் மக்கள் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

About the author

admin

Leave a Comment