பெருந்தலைவர் காமராசர்: ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.
தோழர்களே நீங்கள் இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடையாது – தந்தை பெரியார் 1961-ல் தேவகோட்டையில் பேசினார்..
கர்மவீரர் காமராஜர்
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தொடக்ககால வாழ்க்கை
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா. இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண. இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
போராட்டமே வாழ்க்கை
1920ல் ஒத்துழையாமை இயக்கம், 1923ல் மதுரையில் கள்ளுக்கடை மறியல் போராட்டம், 1927ல் சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டம் நடத்த மகாத்மா காந்தியிடம் அனுமதி பெற்று நடத்த முயன்றபோது சிலை நீக்கப்பட்டது. பல போராட்டங்களில் நடத்தியதால் பிரிட்டிஷ் ஆட்சியின் கைது தொடர்ந்தது. 1941ல் யுத்தநிதி எதிர்ப்பு பிரசாரம் செய்ததால் கைதானர். சிறையில் இருக்கும்போதே விருதுநகர் நகராட்சி தலைவரானார். தீவிர கட்சி பணிக்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
மதிய உணவு திட்டம்
காமராசர் தமிழக முதல்வராக பதவியேற்றபின் 1955ல் பள்ளிகளில் மதியஉணவு திட்டம் அறிமுகப்படுத்தினார். தற்போதும் பின்பற்றப்படும் திட்டம். மற்ற மாநிலங்களும் இதே திட்டத்தை கொண்டு வந்தன. 1957ல் இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார். 1963ல் இலவச கல்வி திட்டத்தை அமல்படுத்தினார். இன்று அதுவே கட்டாய கல்விக்கு வித்திட்டுள்ளது. 1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது பஞ்சாப் போர் பகுதிக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
அணைக்கு அடித்தளம்
காமராஜர் முதல்வராக இருந்தபோது தான் நீர் மேலாண்மை முறையாக கடைபிடிக்கப்பட்டது. மழைநீர் சேமித்து அணை அமைத்து பாதுகாக்கப்பட்டது. மின் உற்பத்திக்கும் வித்திட்டார். மற்ற மாநிலங்களில் தற்போது நடைபெறும் பணிகளை பல ஆண்டுக்கு முன் தமிழகத்தில் நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
- குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.
இறுதிக் காலம்
காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார். 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நினைவுச் சின்னங்கள்
காமராசர் நினைவிடம், கிண்டி தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.