விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? – India vs Australia இன்று பலப்பரீட்சை

 India vs Australia

மொகாலி: 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதி வாய்ப்புக்காக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தங்களது கடைசி லீக் யுத்தத்தில் இன்று இறங்குகின்றன. குரூப்2 பிரிவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மொகாலியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பிரதான எதிரியான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிப்பதால் இதில் வாகை சூடும் அணி இந்த பிரிவில் இருந்து 2–வது அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். தோற்கும் அணி உலக கோப்பையை விட்டு வெளியேறும். அதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்து, பின் பாகிஸ்தானை வென்றது. மூன்றாவது போட்டியில் நுாலிழையில் வங்கதேசத்தை வீழ்த்தியது. துவக்க வீரரான ரோகித் மொத்தமே 33 ரன்கள்தான் எடுத்துள்ளார். மற்றொரு வீரர் ஷிகர் தவான், வங்கதேசத்திற்கு எதிராகத்தான் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். இந்த இருவர் கைகொடுக்க மறுப்பதால்தான், 150 ரன்களை எட்டவே முடியவில்லை.

ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வல்லமை கொண்ட ஒரு அணி. 20 ஓவர் உலக கோப்பையை முதல் முறையாக வசப்படுத்தி விட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வரிந்து கட்டி நிற்கிறார்கள். இந்தியாவை போன்றே தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 8 ரன் வித்தியாசத்தில் தோற்ற போதிலும், அதன் பிறகு எழுச்சி கண்டு, வங்காளதேசம், பாகிஸ்தானை தோற்கடித்தது.

மைதானம்

போட்டி நடக்கும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு இதுவரை நடந்துள்ள 3 இருபது ஓவர் ஆட்டங்களிலும் குறைந்தது 155 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. 2009–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 211 ரன்களை ‘சேசிங்’ செய்தது அதிகபட்சமாகும். ஆனால் இரவில் பனிப்பொழியின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு, 50 ஓவர் உலக கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க நமது அணிக்கு சரியான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்களா? என்பதே ரசிகர்களின் ஆவலாகும்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், டோனி (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஆஷிஷ் நெஹரா, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன், பீட்டர் நெவில், ஜேம்ஸ் பவுல்க்னெர், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட், நாதன் கவுல்டர்–நிலே அல்லது ஜான் ஹேஸ்டிங்ஸ்.

இதுவரை

‘டுவென்டி–20’ அரங்கில் இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 8ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஆஸ்திரேலியா 4ல் வென்றது.

* மொகாலி மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 3 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் ஒன்றில் இந்தியா–இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

* மொகாலியில் ‘டுவென்டி–20’ போட்டியில் இரு அணிகளும் முதன் முறையாக மோத உள்ளன.

ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறுகையில்,‘‘ இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானது. ஒருவேளை இவர்களை வென்றால், அது வியத்தகு வெற்றியாக அமையும். மொகாலி மைதானத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நம்பிக்கை அளிக்கிறது,’’ என்றார்.

விராத் கோஹ்லி

இந்திய அணியின் கோஹ்லி கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடரை பொறுத்தவரை எந்த நேரத்திலும், எந்த அணியையும் எதிர்த்து விளையாட வேண்டும். விதவிதமான சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம். கடந்த போட்டியில் ‘சுழல்’ வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பாண்ட்யாவும் துல்லியமாக பந்துவீசினார். அனுபவம் வாய்ந்த இந்திய அணியின் வெற்றி தொடரும்,’’ என்றார்.

About the author

admin

Leave a Comment